Sunday, August 14, 2016

"போரியலை தளமாகக் கொண்டிருக்கும் படைப்பாளர்களை மக்கள் சந்தேகக் கண்ணுடனேயே நோக்குகின்றனர் ". கோமகன் - பிரான்ஸ் .

"போரியலை தளமாகக் கொண்டிருக்கும் படைப்பாளர்களை மக்கள் சந்தேகக் கண்ணுடனேயே நோக்குகின்றனர் ". கோமகன் - பிரான்ஸ் .
வடபகுதியில் கோப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்ட கோமகன், தனது இளமைக்காலத்திலேயே நாட்டின் சூழ்நிலைகளினால் பிரான்சுக்குப் புலம்பெயர்ந்து நீண்டகாலமாக அங்கு வசித்து வருகின்றார்.தமிழ் எழுத்துப் பரப்பில் வேகமாக வளர்ந்துவரும் படைப்பாளிகளில் கோமகனும் ஒருவர் .சட்டகங்களில் குறுக்காத இவரது படைப்புகள் எளிமையான சொல்லாடல்களுடன் பலதரப்பு வாசகர்களை வசப்படுத்துவது இவரது பெரிய பலமாகும் .தமிழ் எழுத்துப்பரப்புக்குக் கோமகனின் "தனிக்கதை " என்ற சிறுகதை தொகுதி கடந்த வருடம் இவரால் கிடைக்கப் பெற்றுள்ளது . அடுத்த கட்ட முயற்சியாக தான் இதுவரை செய்த நேர்காணல்களை தொகுப்பாக்கி ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார் .இவர் பிரான்சில் இருந்து வெளியாகும் "நடு" இலக்கிய மின் சஞ்சிகையின் பிரதம ஆசிரியராவார் .அண்மையில் தாயகம் வந்திருந்த கோமகனை எமது பத்திரிகை குழு வாசகர்களுக்காக நேர்காணல் செய்திருந்தது .

**************************************

இலக்கியத் துறையில் தங்களின் ஈடுபாடு தொடர்பாக ….....?


சிறுவயது முதல் வாசிப்புப் பழக்கம் இருந்தது. மூத்த சகோதரர் வடகோவை வரதராஜன் ஓர் எழுத்தாளராக இருந்தமையால் அவரது கையெழுத்துப் பத்திரிகைகளிலும் தமிழக சஞ்சிகைகளிலும் ஆர்வம் செலுத்தினேன். அதனால் புனைவில் அதிகளவான ஆர்வம் காணப்பட்டது. பின்னர் புலப்பெயர்வினால் பிரான்ஸில் தஞ்சமடைந்த நிலையில் எனது படைப்புக்களும் முடங்கின. அங்கு வெளியாகிய இரு தமிழ் சஞ்சிகைகளில் கதை, கவிதைகள் எழுதினேன். பின்னர் அவை மூடப்பட்ட நிலையில் 2011 இல் மீண்டும் இணையத்தளமொன்றில் கோமகன் என்ற பெயரில் எழுதத் தொடங்கினேன். அது இணைய சஞ்சிகையாகவே அமைந்தது. அதில் "நெருடிய நெருஞ்சி" என்ற நீண்ட கதை முதன்முதலாக வெளியாகியது .இந்தக் கதையானது 25 வருடங்களின் பின் இலங்கையில் (2011 இல்) நான் நேரில்கண்ட விடயங்களை பிரதிபலிக்கும் ஒன்றாக அது அமைந்தது. தொடர்ந்து வல்லினம், ஒரு பேப்பர், ஆட்காட்டி, முகடு, மலைகள் , அம்ருதா , ஜீவநதி , எதுவரை , காலச்சுவடு போன்றவற்றில் சிறுகதைகள் ,கட்டுரைகள் ,நேர்காணல்கள் என்று தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றேன். கடந்த வருடம் கோமகனின் "தனிக்கதை" என்ற சிறுகதைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளேன்.

தங்களின் படைப்புகளில் தமிழ் மக்கள் யுத்தத்தின் முன்னரும் பின்னும் எதிர்நோக்கியிருந்த பிரச்சினைகள் உள்வாங்கப்பட்டிருந்ததா ?
ஆம், உண்மையில் நெருடிய நெருஞ்சி அடிப்படையில் பயண அனுபவம். புலம்பெயர்ந்த ஓர் அகதி நாடு திரும்பும் நிலையில் தாய்நாட்டை எவ்வாறு தரிசிக்கின்றான். அதில் அவன்பெற்ற அனுபவம் என்ன என்ற களத்தை அடிப்படையாகக் கொண்டது.

"பாண்" என்ற கதையானது ஓர் உண்மை சம்பவம். இந்திய அமைதிப்படையினரின் வருகை காலத்தில் ஒரு பாண்போடும் தொழிலாளி வடமராட்சியில் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். அவரது மகன் பிரான்ஸ் சென்று அங்கு பாண்போடும் பேக்கரியில் வேலைபார்க்கின்றார். அவரது மன உணர்வுகளையும் அனுபவத்தையும் அந்தக் கதை கொண்டிருந்தது.

"அவர்கள் அப்படித்தான் " என்ற கதையானது எமது சமூகத்தில் மலையக மக்களின் இருப்பையும், இயக்கங்களின் விருப்பு வெறுப்புகளுக்கமைய இடம்பெற்ற படுகொலைகளை கேள்விக்குட்படுத்தியிருந்தது . "கிளி அம்மான் " என்ற கதை , ஓர் போராளியின் புலப்பெயர்வையும் அங்கு அவன் சந்தித்த இன்னல்களையும்இறுதியில்அவன்மனப்பிறழ்வுக்குளாகித் தற்கொலை செய்வதை சொல்லி நின்றது ."பாஸ்"போர்ட் - கதையானது இயக்கங்கள் உச்சம் பெற்ற வேளையில் எமது சனங்கள் பாஸ் எடுப்பதற்குப் பட்ட அவலங்களையும் அத்துனுடாக ஓர் இளைஞன் எவ்வாறு அந்நிய தேசத்துக்குச் செல்கின்றான் என்பதனைக் கேள்விக்குட்படுத்தி இருக்கின்றேன் .

குறிப்பாகப் போருக்கு முன்னர் புலம்பெயர் தமிழர்கள் எவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்கியிருந்தனர். பின்னர் போர் நடைபெற்றபோதும், போருக்குப் பின்னரும் தாயகத் தமிழர்கள் எவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்தனர் என்பதனை ஓரளவிற்கு எனது கதைகளில் கேள்விக்கு உட்படுத்தியுள்ளேன்.

இலங்கையில் யுத்தம் நடைபெற முன் ஈழ தமிழ் இலக்கியத்தின் வீச்சும் நோக்கும் ஒரு கட்டமைப்பிலும், போரின் போது வேறொரு கட்டமைப்பிலும் போரின் பின்னர் இன்னொரு வீச்சிலும் பயணித்திருந்தது. தற்பொழுது வெளியாகும் படைப்புகளில் தமிழ் மக்கள் தொடர்பாக எவ்வாறான பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும் ?

போருக்கு முன்னர் வெளியான படைப்புகளில் ஒற்றைப்படை தன்மைகளில், குறிப்பிட்ட அளவிலான எல்லைவரை பிரச்சினைகள் அணுகப்பட்டன படைப்பாளிகள் அந்த எல்லையினை மீறி பேசமுடியாத நிலை காணப்பட்டது. பேசியிருந்தால் அவர்களின் உயிர் இருக்காது. அதாவது பேனைகளின் எல்லைகளானது சுருக்கப்பட்டிருந்தது .ஆனால் போரின் பின்னர் ஓரளவு சுதந்திரமான கருத்துக்களை பொதுவெளியில் முன்வைக்கக்கூடிய நிலை இருந்தாலும் ஓர் இறுக்கமான சூழ்நிலையே காணப்பட்டது. (2009 முதல் 2010 வரை)

இந்தக் காலப்பகுதியில் இறுக்கமான சூழ்நிலை காணப்பட்டிருந்தாலும் போராட்டத்தின் நேரடிப் பங்காளிகளான போராளிகளால் பல போர்க்கால நாவல்கள், மற்றும் கவிதைத்தொகுதிகள் வெளியிடப்பட்டிருந்தன. இவை "போரியல் இலக்கியம் " என அழைக்கப்பட்டது. அதில் எமது போராட்டம், ஏன் தோல்வி அடைந்தது, போராட்டத்தின் பாதை சரியா, குழந்தைப்போராளிகள் ,மற்றும் கட்டாய ஆட்சேர்ப்பு விவகாரங்கள் என்ற பல விடயங்களை இந்த நேரடிப்பங்காளிகள் கேள்விக்குட்படுத்தியிருந்தார்கள். அத்துடன் பல சுய பரிசோதனைகள் அந்தப்படைப்புகளில் மேற்கொள்ளப்பட்டன.

போரியலை தளமாகக் கொண்டிருக்கும் படைப்பாளர்களை மக்கள் சந்தேகக் கண்ணுடனேயே நோக்குகின்றனர். ஏனென்றால் அவர்கள் துரோகிகளாக முத்திரை குத்தப்பட்டு அவர்களின் கருத்துக்கள் தீவிர தமிழ் தேசிய உபாசகர்களால் மறுதலிக்கப்பட்டன. இங்கு எதுவுமே அவ்வாறு நடக்கவில்லை என மறுதலித்தனர். ஆனால் சில சம்பவங்கள், சில செயற்பாடுகள் இந்தப்படைப்பாளிகள் மூலம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

முக்கியமாக யோ.கர்ணனின் "கொலம்பஸின் வரைபடம் " , தமிழ் கவியின் " ஊழிக்காலம் " கவிஞர் கருணாகரனின் கவிதைத்தொகுதிகளான , "ஒரு பொழுதுக்குக் காத்திருத்தல்", "ஒரு பயணியின் நிகழ்காலக் குறிப்புகள்“, "பலியாடு", "எதுவுமல்ல எதுவும்", “ஒரு பயணியின் போர்க்காலக்குறிப்புகள்“, “நெருப்பின் உதிரம்“, “இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள் – மற்றும் படுவான்கரைக்குறிப்புகள்" போன்றவை இறுதிப் போரில் என்ன நடந்தது என்பதனை வெளிச்சத்துக்கு கொண்டுவந்திருந்தன.

எதிர்வரும் நாட்களில் போராட்டத்தின் வலிகள் இருக்கும் வரை இவ்வாறான புனைவுகள் தொடர்ந்து வரும். இவை நடந்தவற்றை பிரதிபலிப்பதுடன் அடுத்த கட்ட நகர்வுகளுக்கான தீர்வுகளையும் முன்வைக்கப்படவேண்டும். அதேவேளை போரியல் இலக்கியம் எதிர்வரும் காலத்தில் முழு வீச்சுடன் செயற்படுமா என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. சில வேளைகளில் வெளிநாட்டு வாசகர்களுக்காக அவை படைக்கப்பட்டாலும் காலப்போக்கில் போரியல் இலக்கியங்கள் இல்லாமல் சென்றுவிடும்.அந்த இடத்தை புலம்பெயர் இலக்கியம் தக்கவைத்துக்கொள்ளும்.

புலம்பெயர் படைப்பாளிகள் இலங்கை சமூகங்கள், நாட்டின் அசாதாரண சூழ்நிலை தொடர்பாக சரியான வெளிப்படுத்தல்களைக் கொண்டுள்ளனரா ?


இல்லை, ஏனெனில் 50 வீதமான படைப்பாளிகள் இந்தவிடையத்தில் தொடர்ந்து மௌனத்தையே பேணிவருகின்றனர். அவர்கள் சாதாரண படைப்புகளையே வெளியிட்டு வருகின்றனர். ஒரு சிலர் புலனாய்வுத் துறை நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்பாடுகளை தொடர்கின்றனர். மறுதலையாக தாயகத்தில் இறுதிப்போர்க்காலங்களில் இடம்பெற்ற அவலங்களை சயந்தனின் "ஆதிரை","சாத்திரியின் "ஆயுத எழுத்து " ஷோபா சக்தியின் "பொக்ஸ் "குணாகவியழகனின் "நஞ்சுண்ட காடு ",விடமேறிய கனவு "அப்பால் ஒரு நிலம் ", தமிழ் நதியின் "பார்த்தீனியம் " மற்றும் நேசக்கரம் சாந்தியின் "உயிரணை " போன்ற நாவல்கள் மக்களுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டின .

ஈழத்தின் வரலாற்றை பேசும் நாவல்கள் வெளியாவதில் இருக்கும் சவால்கள் ?

தமிழகத்தில் புதினங்கள், நாவல்கள் வெளியாகின்றன. அந்த படைப்புகளுக்கு 4 வருடங்கள் கூட தேவைப்படலாம். இந்தக் கால ஓட்டத்தினை ஈழத்து படைப்பாளிகள் ஏற்றுக் கொள்வதில்லை. இது ஓர் கவலைக்குரிய விடயமாகும். ஆனாலும் கனடாவை சேர்ந்த தேவகாந்தன், தனது நாவல்களான "கனவுச்சிறை ", " கதாகாலம் ","கந்தில் பாவை" போன்ற நாவல்கள் மூலம் ஈழத்து வரலாற்று புனைவுகளில் /புதினங்களில் எம்மிடையே தனியான இடத்தைப் பெறுகின்றார் .

போரியல் இலக்கியங்களை படைக்கும் போது போரினால் பாதிக்கப்பட்ட ஒருவர் தொடர்பாக வெளிப்படுத்தல்களை முன்வைக்கும்போது அவருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சந்தர்ப்பம் உண்டு. இந்த நிலையில் எவ்வாறான அணுகுமுறையினை கையாளமுடியும் ?

இந்தச் சந்தர்ப்பத்தில் சில விடயங்களை சூசகமாக வெளிப்படுத்த வேண்டும். அண்மையில் கூட வெளியான சில படைப்புக்களில் கூட இதே விடயங்கள் சூசகமாக கையாளப்பட்டுள்ளது.

சமகால அரசு கருத்துச்சுதந்திர விடயத்தில் தங்களது மென்போக்கை கொண்டிருப்பதாக இருந்தாலும் இதே விடயத்தில் சர்வதேச சமூகத்தின் அழுத்தமும் ஒரு காரணமாகும். அதனாலேயே அரசாங்கம் கருத்துச்சுதந்திர விடயத்தில் நெகிழ்சித் தன்மையைக் கொண்டிருக்கின்றது.

ஈழத்தில் நீண்டகாலத்துக்கு ஒரு சஞ்சிகையை வெளியிடுவதில் சவால்கள் காணப்படுகின்றன. இதற்கு வாசகர்களும் காரணமா ?

மிகவும் முக்கியமான காரணியாக வாசகர்கள் அமைந்து விடுகின்றனர். மல்லிகை, சிரித்திரன் ஆகியவை இருவேறுபட்ட தளங்களில் பயணித்த சுதேசப் பத்திரிகைகள் ஆகும். தற்பொழுது உலகம் மிகவும் சுருக்கியிருக்கும் நிலையில் வாசகர்களின் வாசகப்பரப்பு எண்ணிக்கையில் கடும் வரட்சி ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தை மின்சஞ்சிகைகள் கைப்பற்றியுள்ளன.

அவ்வாறெனில் நமது வெளியீடுகள் , இலத்திரனியல் ஊடகப் படைப்புக்களில் சரியாக புகவில்லையா ?


நவீன முறையில் படைப்புக்களை வெளியிட்டாலும் அச்சுப் பத்திரிகைக்கு உள்ள பெறுமதி, பத்திரிகை வாசகரின் கரங்களுக்கு சென்றடையும் போது ஏற்படும் பரவசம் புதிய தொழில்நுட்பத்தினால் வழங்க முடியாது. அதேவேளை இளம் தலைமுறை மத்தியில் வாசிப்பு மனநிலை என்பது குறைவாகவே இருக்கின்றது.

ஒப்பீட்டளவில் யாழ்ப்பாணத்தில் ஊடகத்துறை வளர்ச்சியடைந்துள்ளது. இதேவேளை ஏனைய சில பகுதிகளில் ஊடகத்துறையில் வளர்ச்சி காணப்படாவிடிலும் ஏனைய இடங்களில் வாசகர்களின் வாசிப்பு நிலை மட்டம் அதிகளவில் காணப்படுகின்றது. இதற்கான காரணங்களை அறிந்து வாசிப்புப் பழக்கத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும்.

முன்னர் வெளியான படைப்புகளில் சாதிக்கட்டமைப்புகள் மற்றும் அதன் அடிப்படையிலான பிரச்சினைகளும் தொழிலாளர் அடக்கு முறைகள் தொடர்பில் அதிகளவில் கவனம் செலுத்தப்பட்டது . அன்று இந்த நிலைமை மாறியுள்ளதா ? அல்லது எதிர்வரும் கால படைப்புக்கள் எவ்வாறான மாற்றங்களைக் கொண்டிருக்கவேண்டும் ?

இன்றைய நிலையில் கதை சொல்லும் உத்திகள் மாறியுள்ளன. புதிய வீச்சுகள் காணப்படுகின்றன. முன்னர் வெளியான சில படைப்புகளை அவற்றின் சொல்லாடல்களுடன் இன்று வாசிக்க முடியாது. இவ்வாறான நிலையில் உலகின் மாற்றத்திற்கு அமைவாக படைப்பாளிகளின் உள்ளீடுகள் மாறவேண்டும். ஆனால் எல்லையற்ற விதத்தில் அவை அமைந்து விடக் கூடாது.

சில படைப்பாளர்கள் சுதந்திரம் என்ற அடிப்படையில் மஞ்சள் பத்திரிகையில் வரவேண்டிய கதைகளைக் கூட இலக்கியத்தரம் என கொண்டாடும் நிலை உள்ளது. அது ஓர் எழுத்தாளனுக்குள்ள அறமல்ல.

படைப்பாளிகளின் வெற்றிக்கான ஆரோக்கியமான சூழல் வடபகுதியில் உள்ளதா ?


முற்றுமுழுதாக உள்ளதெனக்கூறமுடியாது. ஒப்பீட்டளவில் கிழக்கைவிட வடக்கு தாழ்ந்ததாகவே உள்ளது. வாசகர் வட்டம் குறைவடையும் போது சஞ்சிகைகள் வியாபார ரீதியாகப் பலவீனமான தாக்கத்தினை எதிர்கொள்ளும்.

எமது பிரச்சினையை வெளி உலகுக்கு கொண்டுவருவதில் மொழி ஒரு பிரச்சினையாக உள்ளது . இது குறித்து ?


எமது படைப்புகள் நிச்சயமாக மொழியாக்கம் செய்யப்பட வேண்டும். முதல்படியாக வடக்கு, கிழக்கிலுள்ள சகல படைப்புக்களும் சிங்கள மொழியாக்கம் செய்யப்படவேண்டும். அவை சிங்கள மக்களை சென்றடையவேண்டும் . இருதரப்புப் படைப்பாளிகளால் மாத்திரமே இது சாத்தியமானதாகும் .அரசியல் வாதிகளால் இது சாத்தியமற்ற ஒரு செயலாகும். இதன் முதல் படியாக தமிழினியின் "கூர் வாளின் நிழல் " சிங்கள மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இது ஓர் ஆரோக்கியமான கட்டம் என்றே நினைக்கின்றேன்.அதேநேரம் எமது படைப்புகளானது ஆங்கிலம் உள்ளிட்ட சர்வதேச மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்படும் போதுதான் ஒரு மொழியின் வளர்ச்சியும் ஆளுமையும் வேற்று நாட்டவர்களால் அறியக் கூடியதாக இருக்கும்.

தாய்நாட்டில் பிறமொழி படைப்புக்கள் வெளியாவதற்கான சாத்தியங்கள் குறைந்தளவில் காணப்படும் நிலையில், புலம்பெயர் படைப்பாளிகள் நமது மக்களின் பிரச்சினைகளை பிற சர்வதேச மொழிகளில் வெளியிடுவதில் சிக்கல்கள் உள்ளதா ? அல்லது ஏன் அவர்கள் வெளியிடக்கூடாது ?

தமிழர் புலப்பெயர்வை இருவகைப்படுத்தலாம், அவர்களது புலப்பெயர்வானது ஒன்று ஆங்கில பிரிவு நாடுகளுக்கும். மற்றையது போரின் உக்கிரத்தால் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடம்பெற்றது . முதற் புலம்பெயர்ந்தவர்கள் யாழ், மேட்டிமை கலாசாரத்தை அங்கே தொடர்கின்றவர்களாகவும் ,இரண்டாம் கட்டப் புலம்பெயர்வில் ஈடுபட்டவர்கள் தமிழுக்கும் இலக்கியத்துக்கும் ஏதாவது செய்யவேண்டும் என்ற இலக்குடனும் செயற்பட்டுவருகின்றனர்.ஆனாலும் புலம்பெயர்ந்துள்ளவர்கள் தமிழ்மக்களின் பிரச்சினைகளை சர்வதேச மொழிகளில் படைப்பாக்கம் செய்யும் முயற்சிகள் என்பது பற்றாக்குறையாகவே உள்ளது.

ஆங்கில நாடுகளில் புலம் பெயர்ந்துள்ளவர்கள் தமது பதவியையும் தராதரத்தையும் தக்கவைத்துக்கொண்டு படைப்புக்களில் போதியளவு ஈடுபாடற்றவர்களாக யாழ் மேட்டிமையை அங்கும் தொடர்கின்றமையை அவதானிக்க முடிகின்றது.

படைப்பாளிகள் விரும்பியதை படைக்கக்கூடிய சூழல் இலங்கையில் தற்போதைய ஆட்சியின் கீழ் காணப்படுகின்றதா ?

இல்லை. முற்றுமுழுதாக பத்திரிகை மற்றும் கருத்துச்சுதந்திரம் இல்லை. படைப்பாளிகளுக்கு தொடர்ந்தும் அச்சம் காணப்படுகின்றது. ஏற்கனவே இந்த அச்சம் படைப்பாளிகள் மத்தியில் புதைக்கப்பட்டுள்ளது. இதனை செய்தால் இதற்கு இதுதான் விளைவு என அவர்கள் அறிந்துள்ளார்கள். அரசாங்கங்கள் மாறலாம் ஆனால் அரசுகள் விதைத்த சமன்பாடுகள் எடுபடப் பல வருட காலங்களை கழிக்கவேண்டும்.

ஆனாலும் , சுயதணிக்கைகள் காணப்படுகின்றன. இதனை அங்கத நடை என்று கூறுவார்கள். அங்கு ஓர் எள்ளல் கிள்ளல் காணப்படும். ஓர் விடயத்தை நேரடியாக தாக்கமாட்டார்கள். அவை ஒருவகையாக மறைமுகமாகவே தாக்கப்படும். அண்மையில் அகர முதல்வன் "சாகாள்" என்ற கதையை எழுதியிருந்தார். இதில் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினியை சிவகாமி என விழித்து கதை அமைக்கப்பட்டுள்ளது. அது பலத்த விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தது. இவ்வாறான படைப்புக்களை புகலிடத்திலிருந்து வெளியிடமுடியும். ஆனால் தாயகத்தில் இருந்து வெளியிடுவது யோசிக்கவேண்டிய விடயமாகும்.

சமகாலப் படைப்புலகம் தொடர்பாக ?

இலக்கிய படைப்பாளர் தமது பொறுப்புக்களை உணர்ந்து இலக்கியம் படைத்தால் இலக்கிய உலகம் எல்லோராலும் விரும்பப்படுவதாக இருக்கும். மஞ்சள் பத்திரிகையில் வரும் கதைகளை இலக்கிய தரமாக கூறுகிறார்கள். இது பாரதூரமான பின்விளைவுகளைத் தரும். முன்னர் கட்டுக்கோப்பில் இருந்த இளைய சமுதாயம் தற்பொழுது கட்டுப்பாடற்ற சுதந்திரத்தில் உள்ளது. அதற்கு படைப்பாளிகள் ஊக்கிகளாக இருக்கக் கூடாது. அவர்களது படைப்புகளானது பொறுப்புணர்வுடன் இருக்கவேண்டும் . சமகாலத்தில் இடம் பெறும் பாலியல் வன்முறைகள் , கூட்டு வன்புணர்வுகள் உள்ளிட்ட சில சம்பவங்களுக்கு படைப்பாளிகள் ஏதோ ஒருவகையில் ஊக்கிகளாகவே இருக்கின்றனர்.

தாங்கள் புதிய இணைய சஞ்சிகை ஒன்றை ஆரம்பிக்கவுள்ளீர்களா? இது குறித்து?


"நடு", என்ற இணைய சஞ்சிகையை ஆரம்பிக்கவுள்ளேன். "நடு" என்பதனை விதைத்தல்,மத்தி, நீதி என பல்வேறு வகையில்ப் பொருள்கொள்ளலாம் .இதில் எந்தவிதமான வரையறைகளும் இன்றி ஆக்கங்கள் வெளியிடப்படும்.


நன்றி : தினக்குரல் -இலங்கை .
14 ஆவணி 2016

Wednesday, August 10, 2016

‘சாகசக்காரர்கள் எப்போதும் விமசர்னங்களுக்குச் செவிசாய்க்க மாட்டார்கள்’ -பேராசிரியர் அ.ராமசாமி-இந்தியா.

சாகசக்காரர்கள் எப்போதும் விமசர்னங்களுக்குச் செவிசாய்க்க மாட்டார்கள்’ -பேராசிரியர் அ.ராமசாமி-இந்தியா.


இன்றைய சமகாலத் தமிழ் இலக்கிய ஆளுமைகளில் திறனாய்வு, நாடகங்கள், கட்டுரைகள், வரலாறு, சஞ்சிகைகளின் ஆசிரியர் என்று பன்முக அடையாளங்களுக்குச் சொந்தக்காரர் பேராசிரியர் அ .ராமசாமி. ஆரவாரங்கள் இன்றிச் செயலால் பலத்த அதிர்வலைகளை இவர் தமிழ் இலக்கியப்பரப்பில் ஏற்படுத்துவதை காணக்கூடியதாக இருக்கின்றது. இதுவரையில் இவரின் படைப்புகளாக நாடகங்கள் விவாதங்கள், ஒத்திகை, வட்டங்களும் சிலுவைகளும், சங்கரதாஸ் சுவாமிகள், பிரஹலாதா, முன்மேடை, தொடரும் ஒத்திகைகள், அரங்கியல் மற்றும் நாடகவியல் என 8 நூல்கள் அச்சில் வந்துள்ளன. ஊடகங்களால் கட்டமைக்கப்படும் வெகுமக்கள் பண்பாடு மற்றும் பிம்பக்கூறுகள் பற்றிய விமரிசனக்கட்டுரைகள் கொண்ட தொகுதிகளாக - பிம்பங்கள் அடையாளங்கள், வேறு வேறு உலகங்கள், திசைகளும் வெளிகளும், மறதிகளும் நினைவுகளும் என நான்கு நூல்கள் வந்துள்ளன. திரைப்படங்களைப் பார்ப்பதற்கான பார்வைகளை முன்வைக்கக்கூடிய வகையில் அலையும் விழித்திரை, தமிழ் சினிமா: ஒளிநிழல் உலகம், ரஜினிகாந்த்: மாறும் காட்சிகள், தமிழ் சினிமா: அகவெளியும் புறவெளியும்,தமிழ் சினிமாள்\: காண்பதுவும் காட்டப்படுவதுவும் முதலான தொகுப்புகள் வந்துள்ளன. இலக்கியத்திறனாய்வுகளாக மையம் கலைந்த விளிம்புகள், திறனாய்வு: சில தேடல்கள், நாயக்கர் காலம்: இலக்கியமும் வரலாறும் முதலான நூல்கள் வந்துள்ளன. நாவலென்னும் பெருங்களம், கதைவெளி மனிதர்கள் என முறையே நாவல்,சிறுகதை பற்றிய திறனாய்வுக் கட்டுரை நூல்கள் இப்போது வரப்போகின்றன. 2000 -க்குப் பின்பான பெருந்தொகுப்புகளில் இவரது கட்டுரைகள் இடம் பெற்று வருகின்றன. தமிழில் நவீன இலக்கிய விவாதங்களை முன்னெடுக்கும் உயிர்மை, அம்ருதா, தீராநதி, காலச்சுவடு, புதிய கோடாங்கி, தலித், மணற்கேணி போன்ற அச்சு இதழ்களிலும் எதுவரை, மலைகள், சொல்வனம் போன்ற இணைய இதழ்களிலும் தொடர்ந்து எழுதும் இவர் தனது கட்டுரைகளை “அ.ராமசாமி எழுத்துகள்” (http://ramasamywritings.blogspot.in) என்னும் வலைப்பூவில் தொகுத்து அளித்துக் கொண்டிருக்கிறார். அவரோடு முகடு வாசகர்களுக்காக நான் கண்ட நேர்காணல் இது.

கோமகன்

********************************

.ராமசாமியை நாங்கள் எப்படித்தெரிந்து கொள்ள முடியும் ?

திறனாய்வுக்கலையை மையப்படுத்தி எழுதும் எழுத்தாளன் என்றும் நவீனத் தமிழ் வாசிப்பைக் கல்விப்புலத்திற்குள் அதனதன் தோற்றக்காரணிகளோடு பரப்பிவிட வேண்டும் என நினைக்கும் கல்வியாளன் என்றும் புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்ற ஆசைப்படுகிறேன். பலரையும்போல கவிதை எழுதுவதில் தான் தொடங்கினேன். கதைகள் கூட எழுதியிருக்கிறேன். தேன்மழை, தாமரை, கணையாழி, தீபம், மனஓசையெனத் தொடங்கிய பயணத்தைத் தடுத்து நிறுத்தியது முனைவர் பட்ட ஆய்வு. புனைவு மனம் குறைந்து அறிவுவழிப்பட்ட தர்க்கம் மனத்தை ஆக்கிரமித்துவிட்டது. புதுவைப் பல்கலைக்கழகத்தில் நாடகத்துறையில் சேர்ந்தபோது மாணவர்களின் தேவைக்காக நாடகங்களை உருவாக்கத்தொடங்கினேன். கதைகளிலிருந்து - கவிதைகளிலிருந்து - மொழிபெயர்ப்பாக -தழுவலாகவெனக் குறுநாடகங்களையும், பெருநாடகங்களையும் உருவாக்கித்தந்தேன்.

மேடைக்கான நாடக எழுத்தென்பது ஒருவிதத்தில் உருவாக்குவதுதான். அது தொடங்கி நவீனத்துவ தர்க்கம் இடம்பெறும் நாடக எழுத்தாளனாகவும் தர்க்கத்தை முன்வைக்கும் கட்டுரை எழுத்தாளனாகவும் இப்போது அறியப்படுகிறேன். முனைவர் பட்ட ஆய்வுக்காக மார்க்சியத்தின் அடிப்படையிலான இலக்கியத் திறனாய்வுகளை வாசிப்பவனாக இருந்தேன். அங்கிருந்தே எனது இலக்கியப்பார்வை உருவாகியது. ஆய்வுக்காகக் கடந்தகால இலக்கியப் பிரதிகளுக்குள் சமூக நிறுவனங்களின் பதிவுகள், அவற்றின் இயக்கம், முரண்களின் வெளிப்பாடு ஆகியவற்றைப் பார்க்கும் பார்வையை உருவாக்கிக் கொண்டேன். அதிலிருந்து நகர்ந்து நிகழ்காலப் பண்பாட்டை உருவாக்கும் காரணிகளைப் பற்றிப் பேசும் விமரிசகனாக நானே என்னை நினைத்துகொள்கிறேன். குறிப்பாக 2000 -க்குப்பின்னான காலகட்டத்தில் வெகுமக்கள் ஊடகங்களின் வெளிப்பாட்டு வடிவங்களான திரைப்படங்கள், தொலைக்காட்சித் தயாரிப்புகள், பேச்சுக்கச்சேரிகள் எனப் பலவற்றின் வழியாக உருவாக்கப்படும் சமூகக்கட்டமைப்பைப் புரிந்துகொள்ள உதவும் விமரிசனக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதுகிறேன். அதற்கான விதிகளோடு உறவும்முரணும் கொண்ட இலக்கியவிதிகளிலிருந்தும் - இலக்கிய விமரிசன அடிப்படைகளிலிருந்தும் உருவாக்கிக் கொண்ட பார்வைகளே இதற்குள் செயல்படுகின்றன. அதிலும் குறிப்பாகத் தமிழின் ஆதி இலக்கியக் கோட்பாட்டு நூலான தொல்காப்பியம் உருவாக்கித் தந்துள்ள விதிகளை நவீனத்துவப் பார்வையோடு இணைக்க விரும்பும் இலக்கிய விமரிசகனாகவும் பண்பாட்டு விமரிசகனாகவும் என்னைப் புரிந்துகொள்வதையே விரும்புகிறேன்.

"எழுத்து உன்னதம்; அதைச் செய்பவனைச் சமூகமே காப்பாற்ற வேண்டும் " என நம்பும் எழுத்தாளனாக என்னைக் கட்டமைத்துக்கொள்ள நினைப்பதில்லை. நாடோடியாகவும், பொது ஒழுங்கிலிருந்து விலகியும், எனது கஞ்சிக்காக எந்த வேலையும் செய்ய மாட்டேன் என்ற பிடிவாதத்தோடு அலையும் எழுத்தாளர்களை நான் சாகசக்காரர்களாக மட்டுமே நினைக்கிறேன். சாகசக்காரர்கள் எப்போதும் விமர்சனங்களுக்குச் செவிசாய்க்க மாட்டார்கள்; மக்களாட்சி மனநிலைக்கெதிரானவர்களாகவே - அராஜகவாதிகளாகவே இருப்பார்கள். அப்படிப்பட்ட எழுத்தாளர்களும் ஜனநாயக சமூகத்திற்குத் தேவை. அவர்கள் ஒருவிதத்தில் ஜனநாயக சமூகத்தின் அடங்க மறுக்கும் மனச்சாட்சி. அவர்கள் இருந்து விட்டுப்போகட்டும். நான் அப்படி அறியப்பட விரும்பியதில்லை. அதே நேரத்தில் நிலவும் அமைப்புக்கும் அதிகாரத்துக்கும் முழுவதும் ஒத்தோடுதல் ஒரு எழுத்தாளனின் வேலையல்ல என்றும் புரிந்துவைத்திருக்கிறேன்.

இந்தியாவில் எவ்வளவோ துறைகள் இருக்கின்றன ஆனால் எழுத்து உங்களை வளைத்ததன் காரணம்தான் என்ன ?

எழுத்து என்னை வளைத்தது என்று சொல்வது சரியானது தான். வாசிப்பின் வழியாக எழுத்தால் வளைக்கப்பட்டேன். எனது எழுத்துகளுக்கு முழுமையான காரணம் வாசிப்புதான். எனது வாசிப்பின் தொடக்கம் பெரிய எழுத்துக் கதைகள். வைணவ மரபுசார்ந்த நம்பிக்கைகள் கொண்ட விவசாயக் குடும்பம் என்னுடையது. பாரதக் கதைகளையும் இராமாயணத்தையும் வாசிப்பதை ஒரு சடங்காகவும் வாழ்வின் பகுதியாகவும் கொண்ட குடும்பம். வயதான அவ்வா (பாட்டி) மற்றும் தாத்தாக்களின் அந்திமக் காலத்தேவைக்காகவே இவற்றையெல்லாம் தொடர்ந்து வாசித்துக் காட்டியிருக்கிறேன். பாண்டவர்களின் அஞ்ஞாதவாச வாழ்வை சொல்லும் விராட பர்வத்தையெல்லாம் ஒவ்வொரு வருடமும் வாசித்துக்காட்டியவன். எட்டாம் வகுப்புக்குப் பிறகு கிறிஸ்தவப் பாதிரிகளால் நடத்தப்பெற்ற பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. விடுதியில் தங்கிப் படித்தேன். எழுவதற்கும் உண்பதற்கும் தூங்குவதற்கும் ஏங்குவதற்குமென எல்லாவற்றிற்கும் பைபிளின் ஓரதிகாரத்தை வாசித்துவிட்டுப் பிரார்த்திக்கும் கட்டாயம். பைபிள் வாசிக்கப்படும் அழகும், அதற்குள் விரியும் கதைகளும் ஈர்த்தவைகளாக இருந்தன. பைபிளையும் ரசித்துப் படித்தவன். இரண்டு சமயங்களின் கதைகளை அறிந்த நான் இரண்டின் மீதும் நம்பிக்கையற்றவனாக ஆகிப்போனது முரண்தான்.

பள்ளிப்படிப்பில் வரலாற்றிலும் கணித அறிவியலிலும் விருப்பம் கொண்டவனாக இருந்தேன். வரலாற்றுப்பாடம் நடத்திய ஆசிரியைகளின் பிரியத்துக்குரிய மாணவன் . நபர்களின் சாகசக்கதைகளும், ஆண்டுகளும் போலவே கணிதச் சூத்திரங்களும் எனக்குள் ஓடிக்கொண்டிருக்கும். ஐ.நா.சபையின் செயலாளர் யார்? என்ற கேள்விக்கு ‘ ஊதாண்ட்’ பெயரைச் சொன்னபோது அவர் பதவியேற்று 15 நாள் தான் ஆகியிருந்தது. அப்போது எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அதற்காகவே எனக்குச் சிறப்பு உதவித்தொகை கிடைத்தது. வரலாறும் கணிதமும் புனைவு குறைவான பாடங்கள். இரண்டிலுமிருந்து இலக்கியவாசிப்புக்கு நகர்ந்தவன். இலக்கிய வாசிப்பை வெளிகளின் வாசிப்பாக நினைப்பவன் என்பதை நான் எழுதும் கட்டுரைகளில் நீங்கள் பார்க்கமுடியும்.

இரண்டு சமயங்களின் கதைகளை அறிந்த நான் இரண்டின் மீதும் நம்பிக்கையற்றவனாக ஆகிப்போனது முரண்’ என்று சொல்கின்றீர்கள் அப்படியான முரண்கள் ஏற்படுவதற்கான பின்புலங்கள்தான் என்ன ?

பார்ப்பதையெல்லாம் கடவுளாக நினைத்தும் வழிபட்டும் வாழ்ந்தவர்கள் சுற்றி இருந்தார்கள்.ஒவ்வொரு நேரமும் கடவுளிடம் கேட்டுக்கேட்டுக் காரியங்கள் செய்யும் பழக்கமும் அவர்களிடம் இருந்தது. ஆனால் குடும்பத்திற்குள் ஏதாவது சொத்து மற்றும் பணப்பிரச்சினை என்றாலும் சரி, உறவினர் என்பதால் கிடைக்கவேண்டிய மரியாதை கிடைக்கவில்லையென்றாலும் சரி அவர்கள் காட்டும் வன்மமும் பகைமையும் வஞ்சினம் கொண்டதாக அமைவதையும் பார்த்துப் பயந்திருக்கிறேன். 

அப்போதெல்லாம் கடவுளை மறந்துவிட்டுப் பகை வளர்ப்பார்கள். தவறாமல் நல்ல நாட்களுக்கும் கெட்ட நாட்களுக்கும் கோயில், குளம் என்று அலைவார்கள் ஆனால் உறவுக்காரர்களையே கெடுக்கவேண்டுமென எப்போதும் திட்டமிடுவார்கள். இதன்மீதான கேள்விகள் எனக்குச் சின்ன வயதிலிருந்தே இருந்தன. அதனாலேயே குடும்பத்தினரிடம் பெரிய அளவு நெருக்கத்தைப் பேணியதில்லை. அதனை வளர்ப்பதுபோல எட்டாம் வகுப்புக்குப் பிறகு விடுதி வாழ்க்கைக்குள் நுழையும் வாய்ப்பு கிடைத்தது.
விடுதியில் நுழைந்த நாள் முதல் போதனைகள், பிரார்த்தனைகள். எழுப்பியதும் பிரார்த்தனைக்கூட்டம், குளித்து முடித்து உணவுத்தட்டுக்கு முன் ஒரு ஜெபம், வகுப்பு தொடங்க ஒரு ஜெபம், முடிய ஒரு பிரார்த்தனை, திரும்பவும் விடுதியில் பிரார்த்தனைக்கூட்டம், ஜெபங்கள். தினசரி பைபிள் வாசிப்புகள், ஞாயிறு வகுப்புகள் எனப் பைபிளும் பிரார்த்தனைகளும் அன்றாட வாழ்வில் பகுதிகளாக மாறின. மணியடித்து அழைத்துக் கூடிப் பேசி, பாடி, இரங்கிக் கேட்டுக் கொண்டவைகளைக் காதுகொடுத்துக் கேட்கும் கடவுள் யாரென்றே தெரியவில்லை. பள்ளியில் நடக்கும் பதவிப்போட்டிகளும் ஆசிரிய - ஆசிரியைகளின் காதல்களும் கதைகளாக மாணவர்கள் வரை வந்து சேர்ந்துவிடும். கிறித்தவ சமய நடவடிக்கை சார்ந்த நிரலை உருவாக்குவதிலும் மனிதர்களை முன்னிலைப்படுத்துவதிலும் இருந்த சார்பும் அடையாளங்காணலும் கூட எனக்குள் கேள்விகளைத் தோற்றுவித்தன. எல்லாவற்றையும் ஈடுபாட்டோடு செய்தாலும் நான் அந்நியனாகவே நினைக்கப்பட்டேன். அந்த நினைப்பை விரிவாக்கியவர் ஒரு தமிழாசிரியர். பத்தாம் வகுப்பில் உரைநடைகளை நடத்துவதற்காக வந்த அவரின் பெயர் அந்தோனி. நாத்திகராக அறியப்பட்ட அவரைப் பற்றி என்னோடு படித்த அவரின் மகன் சொன்ன கதைகள் சுவாரசியமானவை. அந்தக் கதைகள் தான் பெரியாரின் பக்கம் திருப்பின. பெரியார் எழுதிய சின்னச் சின்னப் பிரசுரங்களைக் கொண்டுவருவான். அவன் வீட்டில் அப்படிப்பட்ட புத்தகங்கள் நிறைய இருப்பதாகச் சொல்வான். ராமாயண, பாரதக் கதைகளை வாசித்திருந்த எனக்குப் பெரியார் முன்வைத்த வாதங்களோடு திரும்பவும் அவற்றை நினைத்துக்கொள்ள முடிந்தது. விளைவு அவை வெறும் கதைகளாக ஆகிவிட்டன; பைபிளும் கதைகளின் திரட்டாகத் தோற்றம் தந்தன. எல்லாவற்றையும் கதைகளாகப் பார்த்துப் பழகியே நான் நாத்திகனானேன்.

உங்களால் இலக்கிய உலகில் சுதந்திரமாக இயங்க முடிகின்றதா ?

இயங்கித்தான் வந்துள்ளேன். இயங்கிக்கொண்டுதான் இருக்கிறேன். அதே நேரத்தில் எனது சுதந்திரத்தின் பரப்பும் எல்லைகளும் எனக்குத் தெரியும். ஒரு கல்விப்புலப் பேராசிரியரின் எல்லைக்குள்ளிருந்து அதிகப்படியான உரிமைகளையும் சுதந்திரத்தையும் பயன்படுத்துகிறேன். நிறுவனத்தின் கட்டுப்பாடுகள் என்னை எப்போதும் தாக்கிவிடாதவாறு பார்த்துக்கொள்கிறேன். ஆனால் அண்மைக் காலத்தில் முகநூல் போன்ற சமூகவலைத்தளங்களின் வரவுக்குப் பின் அடிப்படைவாதிகளும் அறியாமையில் உழலும் ஒற்றை நோக்கம் கொண்ட மனிதர்களும் கருத்துலகில் செயல்படும் பலரைத் தொல்லை செய்யத் தொடங்கியுள்ளனர். எனக்கும் அதுப்போன்ற தொல்லைகளும் எச்சரிக்கைகளும் வருவதுண்டு. குறிப்பாகத் தமிழ்த்தேசியம் பேசுவதாக நம்பிக்கொண்டிருக்கும் அடிப்படைவாதிகளே அச்சுறுத்தலை அளிக்கின்றனர். அவர்கள் கையில் அதிகாரம் கிடைத்தால் இதுவரையிலான பாசிஸ்டுகளைத் தோற்கடித்துத் தாண்டிச் செல்வது நிச்சயம் என்று தோன்றுகிறது. மாற்றுக்கருத்தாளர்களை இயங்கவிடாமல் செய்வதில் அடிப்படைவாதம் வெற்றியடையப்பார்க்கிறது
இன்னும் சொல்லப்போனால் கருத்துச் சுதந்திரம் அரசு போன்ற நிறுவனங்களால் கேள்விக்குள்ளாக்கப்படுவதைவிடச் சமூகக்குழுக்களால் தான் அச்சுறுத்தலைச் சந்தித்து வருகின்றன. திரைப்படங்களைத் தடுப்பது, பெண்ணியக் கருத்துகளைப் பேசும்விதமாகப் பெண்ணுறுப்புகளைக் கவிதையில் உச்சரிக்கச் செய்யும்போது அச்சுறுத்துவது, சாதிய முரண்பாடுகளை -சாதிய மேலாண்மைகளைக் கேள்விக்குள்ளாக்கும் படைப்புகளைத் தடுப்பது போன்ற வினைகளைச் செய்யும் குழுக்கள் தமிழகப்பரப்பில் மிதக்கத்தொடங்கியிருக்கின்றன. அதன் உறுப்பினர்கள் தனிநபர்களைச் சமூக ஊடகங்களில் நெருக்கடிக்குள்ளாக்குகின்றனர். இந்த நெருக்கடிக்காக லீனா மணிமேகலை, பெருமாள் முருகன் போன்றோர் வெளிப்படையாக அறியப்பட்டவர்கள்;அச்சுறுத்தப்பட்டார்கள்.
இலக்கிய வளர்ச்சிக்கு சமூக வலைத்தளங்கள் இன்றியமையாதவை என்று சொல்கின்றீர்கள். அதேவேளையில் அடிப்படைவாதக்குழுக்களும் அதன் உறுப்பினர்களும் சமூகவலைத்தளங்களில் படைப்பாளிகளை நெருக்கடிக்குள்ளாக்குகின்றனர் என்றும் சொல்கின்றீர்கள்.’ இது முரண்நகையாக இல்லையா ?

அந்த முரண்நகையில் இயங்கியல் இருக்கிறது. நெருக்கடி இயக்கத்தைத் தடுத்துவிட முடியாது. தனிமனிதர்கள் தங்கள் செயல்பாடுகள் சமூகத்தின் வளர்ச்சிப்போக்கிற்கும் மனிதகுல நலனுக்கும் நன்மை பயக்கும் என நினைக்கும்போது நெருக்கடிகளைக் கண்டு பின்வாங்கிவிட மாட்டார்கள். எழுதுவார்கள். எழுதுவதைப் பார்வையில் வைக்கச் சமூக வலைத்தளங்களில் தடையற்ற வாய்ப்புகள் இருப்பதால் தொடர்ந்து எழுதுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும். இருந்துகொண்டே இல்லாமல் போகமுடியுமா? தனது கருத்தை முன்வைக்கும் வாய்ப்பிருக்கும்போது சொல்லாமல் விடுவதென்பது இருந்துகொண்டே இல்லாமல் போவதுதானே?

இலக்கியத்தரம் என்பதற்கான வரையறைதான் என்ன ?

இலக்கியத்திற்கு என்று மட்டுமே தரம் இருப்பதாக நினைக்கவில்லை. பொருட்களின் வடிவம், உள்ளடக்கம், பயன்பாடு சார்ந்த தரமே அதன் முதன்மை. பருப்பொருட்கள் முழுமையும் எந்திரவியல் கூறுகளால் ஆனது. ஆனால் இலக்கியம் உள்ளிட்ட கலைகள் அப்படியானவையல்ல. எந்திரவியல் கூறுகளோடு அழகியல் கூறுகளைச் சார்ந்தே அவை அறியப்படுகின்றன. ஏனென்றால் அவை பருண்மையான பொருட்கள் அல்ல. அதேபோல் கலை, இலக்கியங்கள் உடனடிப் பயன்பாட்டை முக்கியமாக நினைப்பன அல்ல. உடனடிப் பயன்பாட்டை விடவும் நீண்டகாலப் பலனை முதன்மையாக நினைப்பவை. அந்த மையத்திலிருந்தே இலக்கியத்தரம் பற்றிய பேச்சு உருவாகிறது. அதனால் ஒருபடித்தான தரம் என்று ஒன்று இருப்பதாக நம்புவதில்லை.

இலக்கியமானது தனிய கலையுடன் நின்றால் போதுமா? இல்லை அது மனித வாழ்வியலில் பெரும் சமூக மாற்றங்களை உருவாக்கவேண்டுமா ?

இலக்கியம் தனியொரு கலை அல்ல. அது ஓவியம், சிற்பம் போன்ற காண்பியக் கலைகளின் கூறுகளை தன்னகத்தே கொண்டது. பேச்சு, பாட்டு போன்ற கேட்புக் கலையின் ஆதாரம் இலக்கியம் தான். நடனம், நாடகம், சினிமா போன்ற இருநிலைக்கலைகளின் தொடக்கமும் இலக்கியம் தான். ஆக, இலக்கியம் நுண்கலை, நிகழ்த்துக்கலை, அசைவுறுக்கலை என எல்லாவற்றோடும் இணைந்து நிற்கும் கலை. இவை எல்லாமே உருவாக்கும் கலைஞரோடும், அவரது வாழிடப்பரப்பு, அங்கு வாழும் மனிதர்களின் வாழ்நிலைகளோடும் தொடர்புடையன. எல்லாவற்றின் தொடர்புகளால் உருவாகும் கலைகள் மற்றும் இலக்கியங்கள் சமூகத்தின் ஆன்மாவாகவும் இயக்கமாகவும் இருக்கின்றன; இருக்கவேண்டும்.

ஈழத்து வாசகர்களிடையே அல்லது படைப்பாளிகளிடையே ஜெயமோகன் சாருநிவேதா, மனுஷ்ய புத்திரன் ஆகியோரது எழுத்துக்களைப் படிப்பது அல்லது அவர்களையிட்டுப் பேசுவது ஓர் அந்தஸ்த்துக் குறியீடாக (status of sympolic) இருக்கின்றது. உண்மையில் இவர்கள் எழுத்துக்கள் தமிழ் இலக்கியப் பரப்பில் அதிர்வலைகளை ஏற்படுத்தினவா?

நிகழ்காலத்தில் அதிகம் எழுதுபவர்களாக இவர்கள் அறியப்படுகிறார்கள். அதிகம் எழுதுபவர்கள் என்று வரிசைப்படுத்தினால் முதலில் இருப்பவர் ஜெயமோகன். இவரது எழுத்துகள் இணையவெளியில் அதிகம் கிடைக்கின்றன. சாருநிவேதிதாவும் இணையத்தில் கிடைக்கக்கூ டிய எழுத்தாளர் தான். ஆனால் மனுஷ்யபுத்திரன் அதிகமும் அச்சு ஊடகங்களில் எழுதுபவர். என்றாலும் அவரது இணையப் பக்கத்திலும் முக்கியமான பதிவுகள், தகவல்கள் கிடைக்கின்றன. புலம்பெயர்ந்து வாழும் ஈழத்து வாசகர்களுக்கு இணையவெளி எழுத்துகள் உடனடியாக அடையக்கூடியன. அதன் காரணமாகவே இவர்களின் பெயரும் எழுத்துகளும் தமிழ் பேசும் -வாசிக்கும் மனிதர்களிடம் விரைவாகப் போய்ச் சேர்ந்துள்ளன. இவர்களை விடவும் இன்னும் அதிகம் எழுதிய/ எழுதுகிற எழுத்தாளர்களும் தமிழில் உண்டு. ஆனால் அவர்களின் எழுத்துகள் இணையவெளியில் படிக்கக் கிடைப்பதில்லை.

இம்மூவரும் அதிகம் எழுதுபவர்கள் என்று சொல்வதைவிடவும் எதை எழுதவேண்டும்/ எப்படி எழுதவேண்டும் என்பதைத் தாங்கள் கண்டடைந்த சில கலை மற்றும் சிந்தனைத் தளத்திலிருந்து எழுதுகிறார்கள். அவை சரியானவையா? சிக்கலானவையா? நிகழ்கால வாழ்வின் மீது தாக்கம் ஏதோ ஒன்று கிடைப்பதாக நம்புகிறார்கள். அதனால் வாசிக்கிறார்கள். இந்தியத் தமிழ் வாழ்வு சார்ந்தே அதிகம் யோசிக்கும் -விவாதிக்கும் இவர்களின் எழுத்துகள் ஈழத்தமிழ் வாசகர்களால் ரசிக்கப்படுவதன் காரணங்கள் என்னவாக இருக்கும் என்பதை இன்னும் ஆழமாக யோசிக்கவேண்டும். ஈழத்தமிழர்களுக்குள் ஓடும் இந்துமத நம்பிக்கை மற்றும் தத்துவப் பிடிப்புகளால் கூட ஜெயமோகன் விரும்பப்படலாம். அதேபோல் புலம்பெயர்ந்த ஐரோப்பிய வாழ்வின் சுதந்திரம் தரும் - குறிப்பாகப் பாலியல் சுதந்திரம் பற்றிய சொல்லாடல்களை முன்வைப்பவர் என்பதால் சாருநிவேதிதா கவர்பவராக இருக்கலாம். மனுஷ்யபுத்திரனின் மொழியும் கவிதையாக ஒன்றை வடிவமைக்கும் முறையும் யாரையும் ஈர்க்கக் கூடிய ஒன்று. ஒருவேளை ஈழத்தமிழர்களின் வலியும் வேதனையுமான வாழ்நிலையிலிருந்து தப்பிக்கும் மனநிலையை அவை உருவாக்குகின்றன என்பதுகூடக் காரணமாக இருக்கலாம். போரையும் சொந்த வெளியற்ற அகதிவாழ்வையும் மறப்பதற்கான மறதிக்குளிகைகளாக அவை தோன்றலாம்.

ஈழத்தின் போரியல் இலக்கியம் பற்றிய உங்கள் பார்வைதான் என்ன ?

போரின் ஏற்பும் இருப்பும் ஏற்படுத்திய காரணங்களும் வலிகளும் விரிவாகப் பதிவாகியுள்ளன. ஈழம் சாத்தியமில்லாமல் போயிருக்கலாம். அந்தக் கனவும் முயற்சிகளும் தமிழ் மொழிக்குத் தந்த இலக்கியங்கள், பழைய புறநானூற்றுப் பதிவுகளை விடவும் காத்திரமான பதிவுகளாக இருக்கின்றன. 1980-களின் பிற்பாதியிலேயே போரியல் இலக்கியப் பதிவுகள் தொடங்கிவிட்டன. தொடக்க நிலையில் விடுதலைப் புலிகளின் நேரடி ஆதரவு இலக்கியங்கள் நவீனத்தன்மையை மறுதலித்த வடிவங்களில் - குறிப்பாக விழிப்புணர்வூட்டும் பாடல் வடிவங்களையும் மேடைக்கவிதைகளிலும் - கவனம் கொண்டிருந்தன. 1990 களுக்குப் பிறகு ஈழ இலக்கியம் என்பதே போரியல் இலக்கியம் என்பதாகவே ஆகிவிட்டது. இந்த இடத்தில் குறிப்பாக மூன்று கவிதைத் தொகுப்புகளைச் சொல்ல விரும்புகிறேன். பதினொரு ஈழத்துக்கவிஞர்கள், " மரணத்துள் வாழ்வோம், வேற்றாகி நின்ற வெளி " என்ற வரிசையில் வந்த தொகுப்புக் கவிதைகள் தமிழ்நாட்டு வாசகர்களுக்கு மெல்லமெல்ல போரியல் வாழ்க்கையை அறிமுகப்படுத்தியவை என்பது எனது கணிப்பு. அதே நேரத்தில் இன்னொரு தொகுப்பான "சொல்லாத சேதிகளும் " இங்கு குறிப்பிட வேண்டிய தொகுப்பு. தமிழ்ப் பெண்களின் புதிய அடையாளத்தை முன் வைத்த கவிதைகள் கொண்ட தொகுப்பு. தொடர்ந்து சேரன், ஜெயபாலன், வில்வரத்தினம் என முக்கியமான கவிகளின் தொகுப்புகளோடு, கட்டுரை, கதை, புகைப்படம் எனப் பலவற்றையும் உள்ளடக்கிய தொகுப்புகளாக லண்டனிலிருந்தும் பாரிஸிலிருந்தும் கனடாவிலிருந்தும் வந்த தொகுப்புகளின் வழியாகப் புலம்பெயர் வாழ்க்கையை வாசித்திருக்கிறேன். பத்மநாப ஐயர், சுகன், சோபா சக்தி, தர்மினி ஆகியோரின் ஒருங்கிணைப்பு முயற்சிகளும் இலக்கியச் சந்திப்புகளும் உண்டாக்கிய பணிகள். இப்போது 2009-க்குப் பிறகான வெளியீடுகள் புனைகதைகளாக இருக்கின்றன. அவற்றைத் தொடர்ந்து வாசிக்கிறேன்
இவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்துகளை ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரெஞ்சு, ஜெர்மன் போன்ற ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கும்போது தமிழின் இருப்பை இந்த உலகம் என்றும் மறக்காது; மறுக்காது. போர்க்கால வாழ்வையும் போரின் நினைவுகள் உண்டாக்கிய பதிவுகளையும் குறித்து வெளியிலிருந்து வாசிப்பவனாக ஒரு நூல் எழுத வேண்டும் என்ற நினைப்பை இவை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றன. விரைவில் முடிக்க வேண்டும்.

ஈழத்திலும் சரி இந்தியாவிலும் சரி சுதந்திரத்துக்கான போராட்டங்கள் வடிவ வேறுபாட்டில் நடைபெற்றன. ஆனால் இந்தியாவில் போரியல் இலக்கியம் அதிகமாக உள்வாங்கப்படவில்லை. இதற்கு என்ன காரணம் என்று எண்ணுகின்றீர்கள் ?

இந்திய சுதந்திரப் போராட்டம் போரியல் அம்சங்கள் கொண்டதல்ல. காந்தியின் வருகைக்கு முன்பேகூடத் திட்டமிட்ட போர்முறைகளைச் சுதந்திரப்போராட்டத்தின் வடிவமாக நினைக்கவில்லை. ஆங்காங்கே கலவரங்களும் தனிநபர் அழிப்பும் நடந்தன என்றாலும் கருத்தியல் ரீதியாகவும் நடைமுறைக்காரணமாகவும் போரை இந்தியர்கள் ஏற்றுக் கொண்டவர்கள் இல்லை. நேதாஜி போன்ற தலைவர்கள், வெளியிலிருந்து கிடைக்கும் உதவியை நம்பியே ராணுவ அமைப்பை உருவாக்கினார்கள். அதுவும்கூட இந்தியாவுக்குள் கட்டப்பட்ட ராணுவ அணிகள் கிடையாது. பிரிட்டானியர்களின் ஐரோப்பிய எதிரிகளோடு இணைந்து நடத்த நினைத்த போர்தான்.
விடுதலைக்குப் பிந்திய இந்தியாவிலும்கூட போரியல் என்பது ஒரு கருத்தியல் வடிவமாக ஒன்றிணைக்கப்படவில்லை. வெவ்வேறு மொழிசார் இனங்களாகப் பிளவுபட்ட ஒரு பெரும்பரப்பை ஒற்றைநாடாக ஆக்கியதும், அதனை ஒரே அரசால் ஆளமுடியும் என்ற நம்பிக்கையையும் பிரிட்டானியர்கள் உருவாக்கிவிட்டுப் போய்விட்டார்கள். போகும்போது சிக்கலான நிலப்பரப்புகளைத் தனித் தேசங்களாகப் பிரித்துவிட்டுப் போனார்கள். என்றாலும் இனப்பிரச்சினைகள் இந்தியாவில் இல்லாமல் இல்லை. அதனை முன்னெடுக்கும் சக்திகள் போர்வடிவங்களைக் கருவியாக நினைப்பதில்லை. அப்படி நினைப்பது நிகழ்காலத்தின் தேவையாக இருக்க முடியுமா? என்பதும் யோசிக்க வேண்டிய ஒன்று. ஏனென்றால் இருபதாம் நூற்றாண்டின் கடைசிக் காலகட்டங்கள் போரியலின் தன்மையையும் மையத்தையும் அர்த்தமிழக்கச் செய்துவிட்டன. இன்றைய போர்கள் ஆயுதங்களால் மட்டுமே நடப்பதில்லை என்பது உறுதியாகிவிட்டன. உலகநாடுகளின் சதிப்பின்னணிகளின் கண்ணிகளால் ஒவ்வொரு நாட்டின் விடுதலைப்போராட்டங்களும் திசைதிருப்பப்படுகின்றன. ஆயுத உற்பத்தி நாடுகளின் வியாபாரத்திற்காகவே தேசிய இனப்போர்களும், வட்டாரப் போர்களும் நடக்கின்றன. இந்தப் பின்னணியில் தான் இந்தியமொழிகளில் போரியல் இலக்கியப் பதிவுகள் இல்லையென்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

தமிழகத்தின் நதிக்கரையோர எழுத்துக்களே ( வைகை நதிக்கரை , தாமிரபரணி நதிக்கரை மற்றும் காவிரி ஆற்று நதிக்கரையோர எழுத்துக்கள் ) அதிகம் தமிழ் இலக்கியப்பரப்பில் உலா வந்தன என்று அண்மையில் படித்திருக்கின்றேன். இது பற்றிய உங்கள் பார்வைதான் என்ன ?

தாமிரபரணிக் கரையும் காவிரிக்கரையும் சிறுகதைகளாகவும் நாவல்களாகவும் எழுதிப் போட்டிபோட்டுப் பதிவுசெய்தன. வைகைக் கரையின் பதிவுகள் அந்த அளவுக்கு அதிகமாக உள்ளன என்று சொல்லமுடியாது. வேளாண்மை சார்ந்த வாழ்க்கைக்குள் ஏற்பட்ட நெருக்கடிகளும் மதிப்பீடுகளின் சரிவும் பதிவுசெய்யப்பட்டன. அதிகம் பதிவுசெய்யப்பட்ட வாழ்க்கை பிராமணர்களின் வாழ்வு தான். தொடர்ச்சியாக நதிக்கரை வாழ்வைத் தொடரமுடியாத நிலையையும் படிப்பு, வேலை காரணமாக நதிக்கரையோரங்களிலிருந்து அவர்களின் நகரங்களை நோக்கிய நகர்வுகள் எழுத்துக்களாகப் பதிவுசெய்யப்பட்டன. அப்பதிவுகளின் காலம் 1970-களோடு முடிந்துவிட்டது. ஆனால் எழுபதுகளுக்குப்பின் இந்தியாவில் நிகழ்ந்த நகர்மயமாதலும் கனரக தொழில் துறை மாற்றங்களும் வட்டாரத்தன்மையோடு பதிவாகத் தொடங்கின. அதனைத் தொடங்கி வைத்தவர்களாக நான் நினைப்பது ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன், சுந்தரராமசாமி, சா. கந்தசாமி. பூமணி, சிவகாமி போன்றவர்கள். தமிழகத்தின் புஞ்சைக்காடுகளும் தீப்பெட்டிவாசனையும் வடமாவட்டங்களின் வறுமைக்கிராமங்களும் அதிகமாக பதிவுசெய்யப்பட்டன. கடந்த கால் நூற்றாண்டுக்காலத்தில் சாதிய முரண்களும், நகரவாழ்வின் சிக்கல்களும், பெண்களின் இருப்பும் தொடர்ச்சியாகப் பதிவுகளாகத் தொடங்கியபோது நதிக்கரைகளெல்லாம் காணாமல் போய்விட்டன.

ஆனால், கடந்த 10 ஆண்டுகளின் இலக்கியங்கள் என்பது முழுமையாகத் தனிமனிதச் சிக்கலையும் அடையாளத்தையும் இருப்பையும் பற்றிய எழுத்துகளாக மாறிக்கொண்டிருக்கின்றன. முந்திய தலைமுறை சமூகத்தின் இருப்பையும் இயக்கத்தையும் உணர்ந்த, அரசியல் தளத்தில் பொருத்திக் காட்டிய எழுத்துக்களைத் தந்தவர்களாக இருந்தார்கள். இப்போது எழுதுபவர்கள் இந்தத் தளத்திற்கு நுழைய நினைத்தால் உலகமயமாக்கலுக்குப் பிந்திய வாழ்க்கையைப் புரிந்துகொள்ள வேண்டும். அந்தப் புரிதல் இப்போது குறைவாகவே இருக்கிறது என்றுதான் சொல்வேன்.

ஓர் இலக்கியத்துக்கு கோட்பாடுகள் அல்லது சித்தாந்தங்கள் முக்கியமானவை என்று எண்ணுகின்றீர்களா இல்லை அது எடுத்துக்கொண்ட கதைக்களமும் கதைமாந்தர்களும் போதுமானவை என்று எண்ணுகின்றீர்களா ?

இலக்கியத்திற்கு முதலில் தேவை இலக்கியத்தின் அடிப்படைகள் தான். அந்த அடிப்படைகளில் முக்கியமானது கதைக்களமும் கதைமாந்தர்களும் மட்டுமல்ல. காலப்பின்னணியும் தான். இந்த அடிப்படைகள் அந்தரத்தில் தனியாக அலைவன அல்ல. இம்மூன்றையும் தக்க சொல்முறையில் எழுதும் போது எழுதுபவரின் நோக்கமும் சார்பும் மனிதத்தன்னிலையின் அடையாளங்களும் வாழ்க்கை பற்றிய நிலைபாடும் இயைந்து உருவாவதுதான் எழுத்து. அந்த எழுத்து அதற்கான கோட்பாட்டை உள்ளடக்கியதாகவே இருக்கும். அந்தக் கோட்பாடு வெளியில் இருக்கும் அரசியல் கோட்பாடல்ல. படைப்புக்கான கோட்பாடு, படைப்புக்குள்ளேயே உருவாக்கப்படுவதுதான்.

பொதுவாகவே பெரிய பிரபல படைப்பாளிகள் எல்லோரும் எழுத்து என்பது ஓர் தியானம் என்றும், அகமனம் ஓர் மையப்புள்ளியில் ஒன்றி இருந்தாலே எழுத்து வசப்படும் என்று சொல்கின்றார்கள். இதை நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள் ?

தியானம், அகமனம் என்ற சொற்களைச் சமய நம்பிக்கையோடும் ஆன்மீகமான சொல்லாடல்களாகவும் நான் புரிந்துகொள்ளவில்லை. எழுதத்தேவையான தரவுகளைக் குறிப்புகளாக எழுதி வைத்துக்கொள்ளாமல் மனப்பதிவுகளாக வரிசைப்படுத்திக் கொள்வதும் முன்வைப்பதும் தான் எழுத்துக்கான தியானம்; அகமனக்கோர்வை என்பதெல்லாம். அதே நேரத்தில் இன்று கையால் எழுதும் முறையைக் கைவிட்டுவிட்டுக் கணினித்திரையில் எழுதும் நிலைக்கு நகர்ந்துவிட்ட பின்பு இந்தத்தியானம், அகமனம் போன்ற சொற்கள் கூட அர்த்தமிழந்துவிட்டன. தட்டச்சுச் செய்வதும், பின் தள்ளி வைத்துக்கொள்வதும், இடையீட்டு முறையில் மாற்றுவதுமென எழுதும் முறைப் பலவாறாக மாறிவிட்டது.

ஆனால் மனித மூளையென்பது நீங்கள் சொல்கின்ற நவீன முறைகளில் இயங்குவதில்லையே ? அதற்கு சிந்தனை என்ற ஒன்று தேவைப்படுகின்றது அல்லவா?

சிந்தனை தேவைதான். சிந்தனை என்பதே மாற்றத்தை ஏற்பதுதான். நவீன மூளையாக மாறும்போது நவீனமுறைகளோடு இயைந்துவிடும். மூளைமட்டும் மாறாது என்று சொல்லமுடியுமா?

ஐரோப்பாவில் இருக்கும் கட்டற்ற பாலியல் சுதந்திரத்தை ஆசிய சமூகம் குறிப்பாக தமிழக மக்கள் எப்படிப் பார்க்கின்றார்கள் ?

எல்லாவகையான சுதந்திரமும் நமக்குக் கிடைக்காதவரை விரும்பத்தக்கதான தோற்றத்தை உண்டாக்கும். ஆனால் நாம் அதற்குள் இருக்கும்போது அதன் எதிர்மறைத் தன்மை தூக்கலாகிவிடும். ஒருவரையொருவர் சார்ந்து வாழும் வாழ்க்கையை முன்னிறுத்தும் ஆசியச் சமூகம்/ இந்தியச் சமூகம் உருவாக்கி வைத்துள்ள குடும்ப அமைப்பின் இறுக்கமும், தனியடையாளங்களை மறுதலிக்கும் போக்கும் தேவையற்றவை என்று தோற்றம் கொண்டன. சடங்கு, நம்பிக்கை, வழிபாடு எனச் சமய நடவடிக்கை சார்ந்து பெண்களைக் கட்டுப்படுத்தும் ஆசியச் சமூகங்களின் வாழ்க்கைக்கு எதிராகப் பெண்கள் குரல் கொடுக்க ஐரோப்பாவையே நாடவேண்டும். அதே நேரத்தில் ஐரோப்பாவில் பெருகும் மணவிலக்குகளும் தனித்து உலவும் முதியோர் பிரச்சினையும் ஆசியச் சமூகங்களின் பால் ஒரு ஈர்ப்பையும் உண்டாக்குவதை மறுப்பதற்கில்லை.

கலப்புத்திருமணம், சாதிமறுப்புத்திருமணம் என அரசியல் சொல்லாடலோடு முன்வைக்கப்பட்ட புதுவகைத் திருமணமுறையை அவ்வளவாக நாடிச்செல்வதில் அதிகம் நாட்டம் காட்டாத தமிழர்கள்/ இந்தியர்கள் தன்னெழுச்சியான மாற்றக்காலகட்டத்தில் இருக்கிறார்கள் என்பது வெளிப்படை. குறிப்பாக உலகமயப்பொருளாதார உறவுகளால் பணவரவு பெற்றுள்ள குடும்பங்கள் அகமண முறையையும் குலக்குறி அடையாளத்தை வைத்துத் திருமணங்களைக் கட்டியெழுப்பும் உறவுகளையும் தளர்த்தத் தொடங்கிவிட்டன. சாதிக்குள்ளிருக்கும் பிரதேச அடையாளத்தைத் தாண்டிய- குலக்குறிகளை உதறிய- திருமணங்கள் தானாகவே நடக்கின்றன. இதன் மறுதலையாக மணவிலக்கு வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகமாகியிருக்கின்றன.

ஐரோப்பாவில் பெருகும் மணவிலக்குகளும் தனித்து உலவும் முதியோர் பிரச்சினையும் ஆசியச் சமூகங்களின் பால் ஒரு ஈர்ப்பையும் உண்டாக்குவதாக சொல்கின்றீர்கள்’. ஆனால், ஆசிய சமூகங்களிலும் இதே பிரச்சனைகள் சமகாலத்தில் மலிந்து காணப்படுகின்றனவே ?

ஆசிய சமூகங்கள், ஐரோப்பியர்கள் கடந்து வந்துவிட்ட காலகட்டத்திற்குள் இப்போதுதான் நுழைகிறார்கள். ஆனால் ஐரோப்பியர்களுக்குக் கிடைத்ததுபோல அவ்வளவு நீண்ட காலம் அங்கேயே தங்கியிருக்கமுடியாது. எல்லாவகையான தகவல் தொடர்புகளும் ஏற்படுத்தும் உடனடித் தாக்கத்தினால் விரைவாக உருட்டிச் செல்லப்படும் வாய்ப்புகள் அதிகரித்துவிட்டன.

மேற்குலக நாடுகளில் ஓரின சேர்கையாளர்களது திருமண உறவு மற்றும் சமூக அந்தஸ்த்துகள் சட்டவாக்கம் பெற்று இருக்கின்றன ஆனால் இந்தியாவில் இது பற்றிய பார்வை எப்படி இருக்கின்றது ?

இப்போதுதான் பேச்சளவில் இருக்கின்றன. தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்ற நிலைகளை ஏற்றுக் கொண்டுவிட்ட இந்திய அரசியல் கட்சிகள் தங்களின் அடிப்படையான கருத்துநிலையோடு இவை முரண்பட்டவை என்றாலும் அவற்றைச் சட்டமாக்கவேண்டிய நெருக்கடியில் இருக்கின்றன. அரசதிகாரத்தில் இருக்கும் பா.ஜ.க.விற்கும் அதன் துணை அமைப்புகளுக்கும் இவையெல்லாம் உவப்பானவையல்ல என்பது வெளிப்படையானது. ஆனால் சர்வதேச சமூகத்தின் நெருக்கடியால் இவற்றைச் சட்டமாக்குவதிலிருந்து பின்வாங்க முடியாது என்பதும் உண்மை.

வக்கிரமான பாலியல் புனைவுகளாலும் ஓரினச்சேர்க்கையினாலும் உருவாக்கப்பட்ட இந்துத்துவாவின் புராணக்கதைகள் இருக்கும்பொழுது எப்படி சமகால அரசு இதனை மறுதலிக்கும் ?

இந்துத்துவம் அன்றாட வாழ்நிலையிலிருந்து கலை, இலக்கியங்கள், கதைகள் போன்றவற்றை விலக்கிவைத்துப் பார்க்கவேண்டும் என்று வலியுறுத்தக் கூடியன. உருவாக்கப்பட்ட பாலியல் புனைவுகளும், ஓரினச்சேர்க்கைச் சித்திரிப்புகளும் பின்பற்றுவதற்கானவையல்ல; விலக்கவேண்டிய எச்சரிக்கைக்கானவையென வியாக்யானங்களைத் தரும்.

இப்பொழுது உள்ள தீவிர இந்துத்துவா சிந்தனைகளை கொண்ட அரசையும், பல்வேறு துறைகளில் முன்னேறி இருந்தாலும் இன்றுவரை சாதீயக்கொடுமைகளில் சிக்கியிருக்கும் இந்திய மக்களையும் ஓர் இலக்கியவாதி என்ற வகையில் எவ்வாறு நோக்குகின்றீர்கள் ?

இருப்பதை மாற்றவேண்டுமென நினைப்பவர்கள் நடப்புவாழ்க்கையில் தங்களுக்கும், தன்னையொத்த சமூகக் குழுக்களுக்கும் பல உரிமைகளும் சலுகைகளும் கிடைக்கவில்லை என்று நினைப்பவர்களாக இருப்பார்கள். அவர்களே நடைமுறை வாழ்க்கையைப் புரிந்துகொண்டவர்கள். அந்த மாற்றம் சில குழுக்களுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் உரிமைகளையும் சலுகைகளையும் தடுக்கவும் கூடும். அப்போது அவர்கள் அதை எதிர்ப்பார்கள். அம்பேத்கரால் வரையறை செய்து எழுதப்பெற்ற அரசியலமைப்புச் சட்டமும் அதன் நடைமுறைப்பயன்பாடும் இருந்த சாதியமைப்பைத் தளர்ச்சியடையச் செய்து இல்லாமலாக்கும் நோக்கம் கொண்டது. அதன் தொடக்க நிலையிலேயே அதனை எதிர்த்தவர்களின் குரல்களும் இருந்தன. பண்டித நேரு போன்றவர்களின் பிடிவாதத்தால் எதிர்ப்புக்குரல்கள் பின் வாங்கியிருந்தன. ஆனால் இப்போது பின் வாங்கிய சக்திகளின் வாரிசுகளிடம் அரசதிகாரம் சென்று சேர்ந்துள்ளது. விளைவுகள் கடுமையாகவே இருக்கும். சாதியவாதமும் முரண்களும் கொலைகளும் தலைதூக்குவதைத் தடுக்க முடியாது என்றே நினைக்கிறேன். ஆனால் இந்தச் சிக்கல்கள் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையானவை என்பதை உணர்ந்து மறுபரிசீலனை செய்யவும் வாய்ப்புகளுமுண்டு. சாதீயவாதம் ஒழியாமல், சாதியப்படிநிலைகளால் கிடைக்காமல் போன உரிமைகளையும் சலுகைகளையும் இனியும் கிடைக்காமல் தள்ளிப்போட முடியாது. வியர்வை சிந்தி உழைக்காத மனிதர்கள் இந்தியாவில் இருக்க முடியும். அதேநேரத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் என்பதற்காக அவர்களுக்கு வியர்வை வழிவதிலிருந்து விலக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதும் நீண்டகாலத்திற்கு நிற்காது.

தொடர்பாடலின் அதீத வளர்ச்சியால் பல சமூக வலைத்தளங்களும் கருத்துக்களங்களும் இன்று எம்மிடையே வந்திருக்கின்றன .இந்த ஊடகங்களின் அதீத வளர்ச்சியினால் தமிழ் இலக்கியப்பரப்பு பாதிப்படைந்து இருக்கின்றதா ?

சமூக வலைத்தளங்கள், புதுவகை ஊடகங்கள் எல்லாம் காலத்தின் தேவையாக வெவ்வேறு காரணங்களுக்காக உருவாகின்றன. அவற்றால் இலக்கியப்பரப்பு பாதிப்படையும் என்று நினைக்கவில்லை. அவற்றின் வரவால் புதுவகை இலக்கிய வடிவங்கள் உருவாகும் வாய்ப்புகள் உண்டு என்பதால் அவற்றை வரவேற்கவும் பயன்படுத்திக்கொள்ளவும் தயாராக வேண்டும்.

தமிழ் இலக்கிய பரப்பில் சிற்றிதழ்களின் பங்களிப்பு ஆரோக்கியமான நிலையில் இருப்பதாக கருதுகின்றீர்களா ?

ஆரோக்கியமான நிலை என்பதற்கான வரையறைகள் எதுவும் இல்லை. தமிழில் ஆரம்பிக்கப்பட்ட சிற்றிதழ்கள் ஒவ்வொன்றிற்கும் ஆரம்ப நோக்கம் ஒன்று இருக்கும். அதனை நிறைவேற்றத்தக்க குழுவொன்று உருவாகும். அக்குழு தனது நோக்கத்திலிருந்து பெருமளவு விலகாமல் நடத்துவார்கள். விலக நேரிடும்போது நிறுத்திவிடுவார்கள். இன்னொரு நோக்கம் தோன்றும்போது திரும்பவும் ஆரம்பிப்பார்கள். அதற்குப் புதிய குழுக்கள் உருவாகும். இதுதான் இதுவரையிலான சிற்றிதழ்களின் வரலாறு. ஆனால் கட்சி, இயக்கம் சார்பில் ஆரம்பிக்கப்படும் சிற்றிதழ்களுக்கு இது பொருந்தாது. ஆனால் 2000-க்குப் பின்னர் தோன்றிய இடைநிலை இதழ்கள் முழுமையான கட்டமைப்போடும் விளம்பரத்தொகைகளைக் கொண்டும் பதிப்பக நலனுக்காகவும் நடத்தப்படுகின்றன. அப்படி நடத்துவது குற்றச்செயலல்ல; காலம் அப்படியான நெருக்கடியை உண்டாக்கியிருக்கிறது.

ஆனால் இந்த இடைநிலை இதழ்கள் அல்லது வணிக சிற்றிதழ்கள்தானே அதிகளவிலான வீச்சுக்களைப்பெறுகின்றன ?

வாசிப்பவர்களை அடைவதும் வாசிப்பதும் விவாதிப்பதும் தான் அதிக வீச்சுகளை எட்டுபவை. இத்தொடர் நிகழ்வுகளுக்கு உதவும் வகையில் வணிகக் கட்டமைப்பும் தேவை. அதனை முற்றிலும் எதிர்மனநிலையில் பார்த்தால் வீச்சையும் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. அதனால் கால் நூற்றாண்டுக்கு முந்திய சிற்றிதழ் மனோபாவத்தோடு எல்லாவற்றையும் வரையறுக்கும் நிலைபாடு எனக்கு உடன்பாடில்லை.

நவீன தமிழ் இலக்கியத்தில் இன்றுவரைக்கும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய படைப்பாளி என்று யாரை உங்களால் இனம்காட்ட முடிகின்றது ?

ஒருவரை மட்டுமே சொல்ல வேண்டுமென்றால் சி.சுப்பிரமண்ய பாரதிதான். கவிதையில் சி.சுப்பிரமணிய பாரதி என்றால் சிறுகதைகளில் புதுமைப்பித்தன். சிறுகதை நாவல் என்ற இரண்டிலும் தன்னை இருத்திவிட்டுப் போயிருப்பவர் ஜெயகாந்தன் என்றே சொல்ல விரும்புகிறேன்.

தமிழ்த்தேசியம் மற்றும் ஈழத்தமிழரது தாயக விடுதலைப்போராட்டம் தொர்பாக உங்கள் புரிதல்கள் எப்படி இருக்கின்றன ?

1983 முதல் ஈழ விடுதலைப் போராட்டத்தைக் கவனித்து வருகிறேன். அப்போது நான் மாணவன். தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்று கேள்விப்பட்டுக் கிளர்ந்தெழுந்த தமிழகம் தழுவிய போராட்டங்களில் கலந்துகொண்டவன். பெரிய அரசியலறிவு அற்ற காலத்திற்குப் பிறகு பெரும்பான்மைச் சிங்கள ஆதிக்கத்திடமிருந்து விடுதலைபெற விரும்பும் தமிழ்ச் சிறுபான்மையின் தனி நாடு கோரிக்கை நியாயமற்றதல்ல என்று புரிந்துகொண்டும் ஆதரவு மனநிலையைக் கொண்டிருந்தேன்.

ஈழத்தமிழர்களை அப்படியொரு நெருக்கடிக்குள் தள்ளிய வரலாறுகளை நானறிவேன். ஈழப் போராட்டம் பண்பாட்டு அடையாளங்களின் காரணமாக உருவான போராட்டம். அதன் பின்னணியில் பொருளாதார நலன்கள் இல்லையென்று சொல்ல முடியாது. பொருளாதார நலன்கள் தான் முதன்மையென்றால் சிங்கள உழைக்கும் மக்களையும் ஒன்றிணைத்து வர்க்கப்போராட்டமாக நடத்தியிருக்கவேண்டும். இது மொழியை அடையாளமாக முதன்மைப்படுத்தி நடந்த போராட்டம். அப்போராட்டமுறையாக, ஆயுதப் போராட்டத்தைத் தேர்வுசெய்வதற்கான நெருக்கடிகளை அரசுதான் உருவாக்கியது. பின்னர், மொழியை மட்டும் அடிப்படையாகக் கொண்ட விடுதலைப் போராட்டமாக இல்லாமல் மதம் மற்றும் பிரதேச அடிப்படைகளைக் கொண்ட போராட்டமாக மாறியதை - மாற்றியதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. பல்வேறு குழுக்கள் உருவானதற்கும், யார் விடுதலையை அடையும் முக்கியக்குழு என்ற முனைப்பில் நடந்த அழித்தொழிப்புகளுக்கும் காரணங்களை வெளியிலிருந்து சரியாகப் புரிந்துகொள்ள முடியாது. இவைதான் ஈழவிடுதலைப் போராட்டத்தைப் பற்றிய பார்வையைப் பலருக்கும் மாற்றியது. எனக்குள்ளும் மாறுபட்ட கருத்துகள் உருவானது. தமிழ்நாட்டின் இத்தகைய போராட்டத்தை முன்னெடுக்காத - பேசவே தயாரில்லாத பலர் தனி ஈழக்கோரிக்கையை ஆதரித்துப் பேசியபோது சந்தேகங்கள் பல உருவாகின.

ஒரு நாட்டிற்கான விடுதலையை இன்னொரு நாட்டின் உதவியுடன் அடைய முடியும் என்ற நம்பிக்கை சிக்கலானது. தேசிய இனங்களின் உரிமை, தனித்துவம், மொழிசார் பண்பாடு என்பதை ஏற்காத இந்திய/ மத்திய அரசுகளின் துணையுடன் தனிநாடும் விடுதலையும் பெற முடியும் என்று நம்பியதை நான் விமரிசனப் பார்வையோடுதான் கவனித்து வந்துள்ளேன். இந்தியப்பிரதமராயிருந்த ராஜீவ் காந்தியின் நடவடிக்கைகள் மீது எனக்குக் கடும் விமரிசனங்கள் இருந்தன. அத்தோடு தமிழ் மொழி பேசிய இஸ்லாமியர்களும், மலையகத்தமிழர்களும் இந்த விடுதலைப் போராட்டத்தைச் சந்தேகக் கண்கொண்டு பார்த்தார்கள் என்பதும் பல கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தன. அவர்களிடம் நம்பிக்கையை ஊட்டவேண்டும் என்ற முயற்சிகள் இருந்ததாகத் தெரியவில்லை. நான் படித்துத் தெரிந்துகொண்டதோடு அங்கிருந்து வருபவர்களோடு நடத்திய உரையாடல்கள் எல்லாம் திருப்தி அளித்தவை அல்ல. எப்போதும் சந்தேகத்தை எழுப்புவனவாக இருந்தன. 2000 -க்குப் பிறகான ஈழப்போராட்டங்கள் மீது எதிர்மறைக் கருத்துகளே உருவாகி வளர்ந்தன. ஒரு தேசத்தை இவ்வளவு காலம் போருக்குள் தள்ளிய இயக்கத்தின் மீது எரிச்சல் கூடத்தோன்றியதுண்டு. என்றாலும் நாம் இன்னொரு நாட்டின் மனிதன். அதில் நுழைந்து கருத்து சொல்லும்-எதிர்ப்பைக் காட்டும்- தேவை நமக்கில்லை என்ற விலகல் மனப்பான்மை தான் என்னுடையதாக இருந்தது.

எமது விடுதலைப்போராட்டமானது இனவழிப்பும் அதன்தொடராக வந்த பேரினவாத சித்தாந்தங்களின் அழுத்தங்களினால் உருவாகியதாக வரலாறு பதியப்பட்டிருக்க, மதம் மற்றும் பிரதேச அடிப்படைகளைக் கொண்ட போராட்டமாக மாறியது என்று எதன் அடிப்படையில் கூறுகின்றீர்கள் ?

தமிழ் மொழி பேசும் இஸ்லாமியர்களும், மலையகத்தமிழர்களும் இந்த விடுதலைப் போராட்டத்தைச் சந்தேகக் கண்கொண்டு பார்த்தார்கள்; இப்போதும் பார்க்கிறார்கள் என்பதை மறுத்துவிடவும் மறந்துவிடவும் முடியுமா? போராட்டக் களத்தில் இணைந்து நின்றவர்களிடம் கூட வடக்கு - கிழக்கு மாவட்ட உணர்வுகள் தலை தூக்கியதை இல்லையென்று சொல்ல முடியுமா?

உங்களுடைய எழுத்துத்துறையில் ஆதர்சங்கள் என்று யாராவது இருந்திருக்கின்றார்களா?

ஜெயகாந்தனின் புனைவெழுத்துகளும் அ- புனைவுகளும் எப்போதும் ஈர்ப்பவை. அவருடைய அ- புனைவுகளைப் போலப் பலவற்றை எழுதவேண்டுமென்ற ஆசை எனக்குண்டு.

புலம்பெயர் இலக்கியம் பற்றய உங்கள் பார்வை எப்படி இருக்கின்றது ?

தமிழின் இருப்பைச் சர்வதேசப் பரப்பிற்குள் அதன் அடையாளத்தோடு கொண்டு சேர்த்துள்ளன. போரின் வழி தமிழர்களின் இழப்பின் அளவு சொல்லத்தக்கதல்ல. அதன் மறுதலையாக இலக்கியமாக - போரிலக்கியமாகவும் புலம்பெயர் இலக்கியமாகவும் தமிழ் பெற்றுக்கொண்டதும் பெரிய அளவினது. அவை சர்வதேசத்துக்கான மொழியில் பெயர்க்கப்படும்போது இலக்கியமாக அவை ஆற்றும் பங்களிப்பு பல பரிமாணங்களைக் கொண்டதாக அமையும். உலகத்தின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்பி, ஆயுதப்போராட்டங்கள் சாதிக்காத - பெற்றுத்தராத விடுதலையைக் கூடச் சாத்தியமாக்கக் கூடும்.

தமிழ் இலக்கியத்தில் ஈழத்தமிழ் இலக்கியம் ஏற்படுத்திய அதிர்வுகள் உங்கள் பார்வையில் எப்படி இருக்கின்றது ?

முதுகலை படிக்கும்போது இலங்கையை ஒரு திறனாய்வின் பிரதேசமாக நினைத்துக்கொண்டிருந்தேன். பேராசிரியர்களான க. கைலாசபதி, கா.சிவத்தம்பி, எம்.எ. நுஃமான், சிவசேகரம், தளையசிங்கம், டொமினிக் ஜீவா எனப்பலரும் உருவாக்கிய சித்திரம் அது. செங்கை ஆழியான், டேனியல் போன்றவர்களின் புனைகதைகள வாசித்திருக்கிறேன். அவை தமிழ்நாட்டின் இன்னொரு பிரதேசப் புனைவுகளாகவே எனக்குள் பதிந்தன. பின்னர் போர்க்கால இலக்கியங்கள் ஏற்படுத்திய தாக்கம் முற்றிலும் வேறானவை. அதைப்பற்றி முன்பே சொல்லிவிட்டேன். தமிழ் இலக்கியப்போக்கையும் வரலாற்றையும் எழுதும் பொறுப்பு என்னிடம் வழங்கப்பெற்றால், கடந்த கால் நூற்றாண்டு வரலாற்றில் செம்பாதி இடத்தை ஈழத்தமிழ் இலக்கியத்திற்கே வழங்குவேன்.

அண்மைக்காலத்து ஈழத்து இலக்கியங்கள் அரசியல் வெடில்கள் அதிகம் நிறைந்து இருப்பதால் அவை பன்முகப்படுத்தப்பட்ட இலக்கியத்தரத்தை காணுவதற்கு தவறிவிட்டன என்ற காட்டமான விமர்சனம் உண்டு. இதை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள் ?

ஒரு மொழியின் இலக்கியப்பரப்பில் பன்முகத்தையின் தேவை பற்றிக் கேட்டால் அதன் தேவையை வலியுறுத்தவே செய்வேன். ஆனால் பெருந்தொகையான மக்களைப் பலிகொடுத்துவிட்டுப் பெரும் யுத்தத்தில் நிர்க்கதியாக நிற்பவர்களைப் பார்த்து இப்படிச் சொல்வது உள்ளுக்குள்ளிருந்து வரும் விமரிசனமாகவே இருக்க முடியும். என்னைப் போல வெளியிலிருந்து விடுதலைப்போராட்டத்தைப் பார்த்தவர்கள் இப்படியெல்லாம் கருத்துச்சொல்ல அருகதையற்றவர்கள்.

ஈழத்தமிழராகிய எங்கள் போராட்ட வலிகளிலும் வாழ்வியலிலும் எதுவித சம்பந்தமுமே இல்லாத தென் இந்திய சினிமா இயக்குனர்களால், எமது வாழ்வும் வலிகளும் திரைப்படமாக்கப்படும் பொழுது அதன் சுயம் அல்லது உண்மைத்தன்மை காயடிப்பது பற்றி எங்களுடையே காட்டமான விமர்சனம் ஒன்று உண்டு. இந்த விமர்சனத்தை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள் ?

நியாயமானது என்றே ஏற்பேன். பக்கத்துவீட்டுக்காரனின் பார்வையோடு எடுக்கப்படுகிறது. பக்கத்துவீட்டுக்காரர்களின் இரக்கப்பார்வைகூட இல்லை அதில். ஒன்று கிளர்ச்சியடைந்து கைதட்டும் மனோபாவமாக இருக்கிறது. இல்லையென்றால் ஆலோசனை சொல்லும் மேதைமைத்தனமாக இருக்கிறது.

மில்லேனியத்தின் பின்னரான உலமயமாக்கலின் அசுர வேகம் மனித வாழ்வியலை அடியோடு மாற்றியிருக்கின்றது. இதை நீங்கள் எப்படிப்பார்க்கின்றீர்கள் ?

அடியோடு மாறச்சொல்கிறது என்பதென்னவோ உண்மைதான். ஆனால் ஆசிய சமூகங்களின் கீழ்த்திசை வாழ்வும், மன அமைப்பும் அவ்வளவு சுலபமாக மாறிவிடக்கூடியன அல்ல. நின்று நிதானமாகத் திரும்பித்திரும்பிப் பார்த்துவிட்டு நகரும் பூனைக்குட்டியைப் போன்றது இந்திய வாழ்க்கைமுறை. இந்துமதத்தின் சமூக அடித்தளத்தின் மேல் தனது தன்னிலைகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் இந்தியர்களும் இலங்கையர்களும் அவ்வளவு சுலபமாக உலகமயத்தோடு ஒட்ட ஒழுகிவிடுபவர்களல்ல.

அண்மையில் இந்தியாவில் இருந்த பெரும் படைப்பாளிகள் தங்களுக்கு கிடைத்த அதி உயர் விருதுகளை எல்லாம் திருப்பி ஒப்படைத்து இருக்கின்றார்கள். இதைப்பற்றிய உங்கள் பார்வை எப்படி இருக்கின்றது?

விருது திருப்பியளித்தல் என்பது எதிர்ப்புணர்வின் அடையாளம். சாகித்திய/ ஞானபீட/ பத்ம விருதுகளைத் திரும்பக் கொடுத்தல் இப்போதிருக்கும் அரசை ஆட்சியதிகாரத்திலிருந்து நீக்கும் நோக்கம் கொண்டதல்ல. கலைஞர்கள், எழுத்தாளர்கள் போன்றவர்கள் எப்போதும் பண்பாட்டரசியலில் கவனம் செலுத்துபவர்கள். இப்போதுள்ள அரசின் பண்பாட்டு நடவடிக்கைகளும் கொள்கைகளும் தங்களுக்கு உவப்பானவையல்ல என நினைக்கிறார்கள். இந்துமதத்தின் தோற்றம் இந்த நிலப்பரப்பில் உருவானது என்றாலும் அதன் பகுதியாகவே மாற்றுக்கருத்துகளையும் சிந்தனைப்போக்குகளையும் உள்வாங்கிய - உடன் வாழ அனுமதித்த வரலாறு இந்தியாவிற்கு உண்டு என்ற நம்பிக்கை தவறானது என்று சொல்ல முடியாது.

மதச்சார்பின்மை அல்லது சகிப்புத்தன்மை என்பது ஆங்கிலேயர்களின் காலனியாதிக்கம் உருவாக்கித் தந்த கருத்தல்ல. வைதீக இந்துமத உருவாக்கத்தின் சமகாலத்திலேயே சமணம், பௌத்தம் போன்றன வைதீகத்தைக் கேள்விக்குள்ளாக்கிய கருத்தோட்டங்கள் கொண்டவை. தென்னிந்தியாவில் வைதீகத்தை ஏற்றுக்கொள்ளாத மனிதர்களின் வாழ்நிலையைக் காட்டும் திணைவழி வாழ்க்கை முறை இருந்துள்ளது என்பதைத் தமிழின் திணைக்கவிதைகள் சொல்கின்றன. அதிலிருந்து உருவான வாழ்க்கை முறையே திராவிட மொழிகளின் செல்வாக்குப்பெற்ற தென்னிந்தியாவின் சமயவாழ்வு. வைதீக இந்து சமயத்தின் பிரிவுகளாகச் சொல்லப்படும் அறுசமயங்களும் வெவ்வேறு கருத்தியலையும் சடங்குகளையும் கொண்டாட்டங்களையும் கொண்டவை. சார்வாகம், நியாயவைசேடிகம், ஆசிவகம் போன்ற வைதீக சமயத்தை நிராகரிக்க முயன்றவை. சைவத்தின் பிரிவாகத்தோன்ற வீரசைவம் தனித்த வாழ்முறையைக் கன்னட தேசத்தில் உண்டாக்கிய வரலாறு உண்டு. வைணவத்தைச் சூழலோடு பொருத்தி வேறுபாடுகளைக் களைய முற்பட்ட இராமானுசர் போன்றவர்கள் இங்கு தோன்றியவர்கள். எனவே இசுலாமியமும் கிறித்துவமும் இங்கு வருவதற்கு முன்பே பன்மைத்துவப் பண்பாடு இந்தியாவின் அடையாளம். அதனைத் தொலைப்பது சமூகத்தில் அமைதியைக் குலைக்கும் எனக் கலைஞர்களும் எழுத்தாளர்களும் நினைக்கிறார்கள். அந்த நினைப்பைச் சொல்ல தங்களிடம் இருக்கும் வழியாக/ கருவியாகவே விருதுகளைத் திருப்பித்தரும் நிகழ்வைக் கையிலெடுத்தார்கள். விருதுகளை மறுதளித்தல் அல்லது திருப்பித் தருதல் உலகம் முழுவதும் எதிர்ப்பின் அடையாளமாக இருந்துள்ளது. இதனோடு உடன்படுகிறவன் நான். ஆனால் இதில் உடன்பாடில்லாதவர்களைக் கட்டாயப்படுத்தித் திருப்பித் தரும்படி வலியுறுத்துவதையும் நான் கண்டிப்பேன்.

இறுதியாக, ‘இன்றைய பல எழுத்தாளர்களும் சரி திறனாய்வாளர்களும் சரி தங்கள் சொற்களை பொதுவெளியில் கூறியதற்கு விசுவாசமாக இல்லது பின்னர் அவற்றை தங்கள் சொந்தவாழ்வில் அநாதரவாக கைவிட்டுள்ளார்கள்’. என்ற ஓர் கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது இதை எப்படி நீங்கள் பார்க்கின்றீர்கள் ?


பொதுவெளி அடையாளமும் தனிமனித அந்தரங்கமும் எப்போதும் எதிரெதிர்ப் பயணங்களை மேற்கொள்ளக்கூடியன. இரண்டையும் ஒன்றாக வைத்திருப்பவர்கள் மகான்கள். எழுத்தாளர்கள் மகான்களா ? தெரியவில்லை. மகான்களாக அறியப்பட்டவர்களின் அந்தரங்க வாழ்வுகளே, அவர்களின் மறைவுக்குப் பின்னர் விமரிசனங்களைச் சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றன. எழுத்தாளர்களும் மனிதர்கள் தானே? மனிதன் மகத்தான சல்லிப்பயல் என்று ஜி.நாகராஜன் சொன்னதைத் திரும்பச் சொல்ல வேண்டும்.

முகடு -பிரான்ஸ் 

02ஆவணி 2016

Saturday, July 16, 2016

"செயலுக்குத் துணியாத எதுவும் கற்பனையின் கோடுகளைத் தாண்டுவதில்லை"-நேர்காணல் -கருணாகரன்- இலங்கை.

"செயலுக்குத் துணியாத எதுவும் கற்பனையின் கோடுகளைத் தாண்டுவதில்லை"-நேர்காணல் -கருணாகரன்- இலங்கை.ஈழத்தின் வடபுலத்தில் உள்ள இயக்கச்சி கிராமத்தில் பிறந்தவர் கருணாகரன். தற்பொழுது கிளிநொச்சியில் வசித்து வருகிறார். கவிஞராகவே ஈழத்து இலக்கியப்பரப்பில் அடையாளப்படுத்தப்பட்டவர். இருந்த போதிலும் ஒரு கதைசொல்லியாகவும், ஊடகவியலாளராகவும், தொடர் இலக்கியச் செயற்பாட்டாளராகவும, பதிப்பு முயற்சிகளில் ஈடுபடுகின்றவராகவும் பொது வெளியில் வெளிப்படுத்திருக்கின்றார். இவர் "வெளிச்சம் " கலை இலக்கிய இதழின் ஆசிரியராகவும் "காட்சி" ஊடகத்திலும் பணியாற்றியிருக்கிறார். பத்திரிகையாளரும் கூட. 1980 களில் ஈழ விடுதலைப்போராட்டத்தில் தன்னை ஒரு போராளியாக இணைத்துக்கொண்ட கருணாகரன், விடுதலைப்போராட்டம் உச்சம் பெற்ற வேளையிலும், வீழ்ச்சி அடைந்த காலகட்டத்திலும் சமகாலத்தில் பயணித்த ஓர் போராளியாவார். இதுவரையில், "ஒரு பொழுதுக்குக் காத்திருத்தல்", "ஒரு பயணியின் நிகழ்காலக் குறிப்புகள்“, "பலியாடு", "எதுவுமல்ல எதுவும்", “ஒரு பயணியின் போர்க்காலக்குறிப்புகள்“, “நெருப்பின் உதிரம்“, “இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள்" என்று ஏழு கவிதைத்தொகுதிகள் வெளியாகியுள்ளன. தவிர, “இப்படி ஒரு காலம்“ என்ற கட்டுரைத் தொகுப்பும் “வேட்டைத்தோப்பு“ சிறுகதைத் தொகுதியும் இவருடையவை. சமூகவியலாளராகவும், அரசியல் ஆய்வாளராகவும் இலக்கியச் செயற்பாட்டாளராகவும் இயங்கி வரும் கருணாகரன், ஈழத்தின் சமகால அரசியல், இலக்கியம், சமூக நோக்கு போன்ற பலவிடயங்களை காலச்சுவடு வாசகர்களுக்காக பேசியிருக்கிறார்.

கோமகன்

***********************************

உங்களை எப்படியாக தெரிந்து கொள்வது?

அவரவர் தாம் விரும்புகிற மாதிரியாக அளக்காமல். உண்மைகளின் வழியாக.

இந்தப் பதிலை கவிஞர்களுக்கே உரிய ஞானக்கிறுக்காக எடுத்துக்கொள்ளலாமா ?

அப்படியல்ல. இது எல்லோருக்கும் பொதுவான ஒன்றே. ஒருவரை அறிந்து கொள்வதும் மதிப்பிடுவதும் பொறுப்பு மிக்கமுறையில் இருக்க வேணும். ஆனால், தமிழ்ச் சூழலில் இது குறைவு. ஒருவரைப் பற்றி தங்கள் அபிப்பிராயங்களை அவரவர் விரும்புகின்ற மாதிரியாக ஏற்றி வாசிக்கிறார்கள். தாம் உன்னிப்பாகக் கவனிக்காமல், பிறர் சொல்லும் வதந்திகளையும் தகவல்களையும் பகுத்தாராயாமல் அப்படியே வாய்பாடாகப் பின்பற்றும் போக்குத்தான் தமிழர்களிடம் கூடுதலாக உண்டு. இது அநீதி. தவறு. இந்தத் தவறு, பிழையான இடத்துக்கே அவர்களையும் வரலாற்றையும் கொண்டுபோய் விடும்.

ஓர் சாதாரண இளைஞனுக்கே உரிய கனவுகள் கற்பனைகள் உங்கள் இளமைக்காலத்தில் இருந்தனவா ?

துக்கம் தருகின்ற கேள்வி இது. அன்று ஏதோ எல்லாம் இருந்தன. இன்று எப்படியெல்லாமோ ஆகி விட்டன என்பது போல் உங்கள் கேள்வி இருக்கின்றது. அதென்ன சாதாரணன் அசாதாரணன் ?

இது எந்தவிதத்தில் துக்கம் தரும் கேள்வியாக முடியும்?

எங்களுடைய பதின்ம வயதில்தான் ஈழ விடுதலைப்போராட்டம் எழுச்சியடைந்தது. அப்பொழுது விடுதலைக் கனவு எல்லாருடைய இதயங்களிலும் பூத்தது. பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும் இளைய பெண்களும் போராட்டத்தில் அலையலையாகச் சென்றனர். போராட்டத்திலும் விடுதலையிலும் மாபெரும் நம்பிக்கை இருந்தது. ஆனால், பிறகு ஏற்பட்ட சரிவுகளும் வீழ்ச்சிகளும் கடந்த காலத்தை (நமது நாட்களை) இரத்தச் சேற்றிலும் துயரக்கடலிலும் புதைத்து விட்டன. கடந்த காலத்தை மட்டுமல்ல, நிகழ்காலத்தையும்தான். எதிர்காலமும் அப்படியி்ல்லாமல் இருக்க வேணும் என்பதே இன்றைய பிரார்த்தனை.

போராட்டத்தில் நேர்மையான பங்களிப்பைச் செய்திருக்கிறேன் என்ற ஒரு எண்ணத்தைத் தவிர, வேறு எதுவும் இல்லை.

எல்லா இளைஞர்களுக்கும் பதின்ம வயது என்பது கனவுகள் கற்பனைகள் என்று பூத்துக்குலுங்கும் வசந்தகாலம். இதை யாராலுமே கடக்காமல் வந்திருக்க முடியாது .இந்த சாதாரண இளைஞனில் இருந்தே அசாதாரண போராளி உருவாகின்றான்;அவ்வாறு உங்களுக்கு ஒன்றுமே ஏற்பட வில்லையா ?

ஒவ்வொரு பருவத்துக்கும் தனித்தன்மையும் சிறப்புகளுமுண்டு. என்னுடைய இளைமைக்காலமும் அப்படித்தான். தவிர, சாதாரண இளைஞர்களில் இருந்து சாதாரண போராளிகள்தான் உருவாகுவார்கள். அதுதான் சரியானதும் கூட. இங்கே சாதாரணமான போராளிகள் என்று நான் அர்த்தப்படுத்துவது, சனங்களில் இருந்து தங்களைப் பிரித்துக் கொள்ளாதவர்களை. “அசாதாரணமான நிலை“ என்று வந்தவுடன், தங்களுடைய இலட்சியங்களைப் பற்றிப் பேசும் அளவுக்கு சனங்களுடன் உறவைக் கொண்டதில்லை எவரும். இயக்கம் என்றால், இயக்கத்தினர் என்றால் சனங்களை விட தாம் மேலானவர்கள் என்ற எண்ணத்தோடு நடந்து கொண்ட பல போராளிகள் மனதில் இன்னும் தோன்றுகிறார்கள். சனங்களை விட தாம் மேலானவர்கள் என்ற எண்ணும்போதே சரிவு ஏற்பட்டு விட்டது. இதுதான் எங்கள் போராட்டத்தை வழிமாற்றியது. நீங்கள் சொல்வதைப்போல அசாதாரண (கற்பனைத்தனமான – சாகஸங்களுடைய) போராளிகளும் – தலைமைகளும் உருவாகியதால்தான் எங்களுடைய போராட்டம் இப்படித் துயரத்தில் முடிந்ததா என்ற கேள்வி எழுகிறது. (எல்லா இயக்கங்களுக்கும் இது பொருந்தும்). இத்தனை ஆண்டுகளின் பின்னும் வயது முதிர்ந்த நிலையிலும் பலரும் அதே நிலையில் இருப்பதைப் பார்க்கிறேன். இது பெருந்துயர். தீராத்துக்கம்.

ஆரம்பகால கட்டங்களில் ஓர் போராளியாக உங்களை இனங்காட்டிய நீங்கள், ஓர் கவிஞராகவும், கதைசொல்லியாகவும் வரவேண்டிய அழுத்தங்கள் எப்படி உருவாகின?

அரசியல்வாதிகள் தங்களை இனங்காட்டுவதைப்போல, போராளியாக இனங்காட்டினேன் என்று சொல்வது சரியெனப்படவில்லை. அன்றிருந்த சூழலில் அப்படி உருவாகினேன் என்பதே சரி. அன்றைய சூழலின் விளைவும் நியாயமும் அது.

தவிர, வாசிப்புத்தான் எழுத்தில் ஆர்வத்தை உண்டாக்கியது. ஒன்றிலும் நேரடி அழுத்தம் இல்லை. ஆனால் ஆழ்ந்து யோசித்தால் எல்லாமே சமூக அழுத்தங்களின் விளைவுகள்தான்.

துப்பாக்கிகள் இருந்த பொழுது பேனைகளின் வீச்சு எப்படியாக இருந்தது?

துப்பாக்கிகளுக்குப் பணிந்த பேனைகளும் உண்டு. பணியாத பேனைகளும் உண்டு. பணியாத போது தலைகள் போனதும் உண்டு.

அப்படியானால் விடுதலைப்புலிகள் உச்சம் பெற்ற வேளையில் மட்டிறுத்தப்பட்ட ஜனநாயகப் பண்புகளையும் விழுமியங்களையும் கொண்ட பேனைகளே உச்சம் பெற்று இருந்தன என்பதை ஆமோதிக்கின்றீர்களா ?

அப்படிச்சொல்ல முடியாது. உங்களுடைய கேள்வியும் சிந்தனையும் புலிகளை மட்டுமே சுற்றிக் கொண்டிருக்கிறது. அதனால்தான், இந்த மாதிரிக் கேள்விகள் வருகின்றன என்று எண்ணுகிறேன். “புதியதோர் உலகம்“ நாவல் புலிகளுக்கப்பாலானது. அஸ்வகோஸின் “வனத்தின் அழைப்பு“, ஓட்டமாவடி அரபாத்தின் “ஸ்டேஷன் மாஸ்ரர்“, ஷோபாசக்தி, சக்கரவர்த்தி போன்றோரின் கதைகள், சேரனின் “எலும்புக் கூடுகளின் ஊர்வலம்“ சுகன், கற்சுறா, தமயந்தி, அற்புதன், பானுபாரதி, சி. புஸ்பராஜா, சிவரமணி, செல்வி எனப் பலருடைய எழுத்துகள், முறிந்த பனை, முக்கியமானவையாக இருக்கின்றன.
இதைப்போல புலிகளின் பக்கத்திலிருந்து வந்த படைப்புளும் உண்டு. குறிப்பாக அம்புலி, மலைமகள், வசந்தன், தமிழ்க்கவி, கோளாவிலூர் கிங்ஸ்லி, புதுவை இரத்தினதுரை, குணா கவியழகன், தமிழினி, கரும்பறவை, தூயவன், மலரவன், மருதம், சுதாமதி என்று அங்கும் ஒரு நீள் வரிசை உண்டு.

அதிகளவு ஜனநாயகப் பண்புகள் காயடிக்கப்பட்டது புலிகளின் காலம் என்பது வரலாறு. அதனாலேயே எனது கேள்வியும் சிந்தனையும் புலிகளைச் சுற்றியே வருவதில் தவறேதும் இல்லையே ?

தவறு. தமிழ் அரசியல் சூழலில் மட்டுமல்ல, இலக்கியம், பொதுவாழ்வு, ஊடகம், நிர்வாகம் போன்ற பலவற்றிலும் ஜனநாயகப் பண்புகள் காயடிக்கப்பட்ட ஒன்றே. முறையான ஜனநாயகம் இருக்குமானால் சாதியமும் பிரதேசவாதமும் ஆணாதிக்கமும் இன்னும் இருக்குமா? ஜனநாயக மறுப்புச் செயல்கள் தொடருமா ? ஏகப் பிரதிநிதித்துவக் கதையாடல்கள் நீளுமா ?
கையில் ஆயுதம் வைத்திருக்கவில்லை என்பதற்காக ஒரு சமூகத்தில், அல்லது ஒரு மனிதரிடத்தில் ஜனநாயகம் தளைத்தோங்கியிருக்கிறது என்று பொருளில்லை. துரோகி – தியாகி போன்ற சொற்பிரயோகங்களும், ஏகத்துவ மனப்பாங்கும், எதையும் கறுப்பு – வெள்ளையாகவே பார்க்க முனையும் தன்மையும் ஜனநாயக அடிப்படைகளுக்கு முரணானவை. தமிழ்ப்பொதுமனம் என்பது பெருமளவுக்கும் ஜனநாயகப் பண்புகளை மறுக்கும் விதமாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. தமிழ்ச்சமூகமே ஜனநாயக விரோதச் சமூகம்தான். குடும்பத்திற்குள்ளிருந்து பொதுவெளிவரை பல அடுக்குகளில், பல நிலைகள் இதைப் பார்க்க முடியும். ஆகவே, ஒரு தரப்பை மட்டும் குற்றம் சாட்டுவது நியாயமில்லை. புலிகள் தமிழ்ச்சமூகத்தின் விளைபொருள். அதனால்தான் அவர்களைத் தங்களுடன் நெருக்கமாக தமிழர்கள் அடையாளம் காண்கிறார்கள்.

“புதியதோர் உலகம்“ மற்றும் “முறிந்த பனைகள்“ என்று எழுதிய பேனைகள் புலிகளுக்கப்பால் வந்திருந்தபோதிலும் அவைகளின் முனைகள் முறிக்கப்பட்டன. ஆனால் புலிகள் உச்சம் பெற்ற வேளையில் ஜனநாயக பண்புகள் என்றால் என்னவிலை என்று கேட்க வேண்டியிருந்ததே ?

இதற்கான பதிலை முதற் கேள்வியின்போதே சொல்லி விட்டேன். மேலதிகமாகச் சொல்வதாக இருந்தால், ஜனநாயக மறுப்பை புலிகள் மட்டுமல்ல, ஏனைய இயக்கங்களும் தரப்புகளும் தமக்குள் கொண்டிருந்தன. புளொட் வதைமுகாமாகியதன் வெளிப்பாடே “புதியதோர் உலகம்“, “தீப்பொறி“ இன்ன பிற. ரெலோவுக்குள் நிகழ்ந்த உள்வெடிப்புகளும் – ஜனநாயக மறுப்புகளுமே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடந்த மோதலும் மற்றும் தாஸ் அணியின் கொலையும். ஈ.பி.ஆர்.எல்.எவ் புக்குள் நடந்த உள்முரண்பாடுகளும் ஜனநாயக நெருக்கடியுமே அது பல அணிகளாகப் பிரிந்ததும் பலர் ஒதுங்கியதும். ஈரோசுக்குள் நிகழ்ந்த ஜனநாயகப் பிரச்சினைகளே பவானந்தன் போன்றவர்களை நியாயமற்று வெளியேற்றியதும் உள் முரண்பாடுகளில் அது நலிவுற்றதும் பின்னாளில் அந்த அமைப்பு அடையாளமே தெரியாமல் போனதும்.
எதிர் இயக்கங்களுக்கு மட்டுமல்ல, தன்னுடைய இயக்கத்துக்கே – தானிருந்த அமைப்புக்கே - பயந்து பயந்து வாழவேண்டியிருந்த நிலை எல்லா இயக்கத்தின் போராளிகளுக்கும் இருந்திருக்கிறது. அரச படைகளுக்கு நிகரான பயங்கர உணர்வை இயக்கங்களும் ஏற்படுத்தியதுண்டு. இந்த ஜனநாயக மறுப்புக்காகப் போராடி மடிந்த, ஓரங்கட்டப்பட்ட போராளிகள் பலர். இப்படியெல்லாம் நடந்த படியால்தானே நாம் வெற்றியடைய முடியாமலும் விடுதலையைப் பெற முடியாமலும் போனோம்.

மேலும் நீங்கள் இந்த இடத்தில் ஒன்றைப் புரிந்து கொள்ள முற்படுவது அவசியம் என எண்ணுகிறேன். ரெலோ மீதான புலிகளின் தாக்குதல் நடந்து சில மாதங்களில் பிரபாகரன் சுதுமலை அம்மன்கோயிலின் முன்பாக உரையாற்ற வந்தபோது 20 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கூடினார்களே. இது எப்படி? புலிகள் மீது சுமத்தப்படும் எல்லாவகையான குற்றச்சாட்டுகளின் மத்தியிலும் அவர்களுக்கே அதிக ஆதரவு அலை உள்நாட்டிலும் புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் நாட்டிலும் உள்ள தமிழர்களிடத்தில் இன்னும் இருக்கிறது. இது ஏன்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை நாம் கண்டறியும்போது பல விடயங்கள் தெளிவாகும். தமிழ்ச்சமூகத்தைப் புரிந்து கொள்வதற்கு இந்தக் கேள்விகளுக்கான விடை பெரிதும் உதவும்.

இயக்கங்களில் மட்டுந்தான் இத்தகைய ஜனநாயக விரோதப்போக்கு இருந்தது என்றில்லை. இன்றைய அரசியற் கட்சிகள், அரசியலாளர்கள், ஊடகங்கள், இலக்கியப் படைப்பாளிகளிடையே எனப் பல இடங்களிலும் இது தாராளமாக உண்டு. தமிழ்ச் சமூகமே ஜனநாயகத்துக்கு மாறான ஒன்றுதான்.

முள்ளிவாய்க்கால் பேரவலம் நடைபெற்ற பொழுது இந்திய மத்திய அரசுடன் கைகோர்த்து நின்ற தமிழகத்தின் பிரபலங்கள் யுத்தம் முடிவடைந்ததின் பின்னர் வன்னி மக்களை சந்திப்பதன் அரசியல்தான் என்ன?

தந்திர அரசியல்.

எந்தவிதத்தில் இது தந்திரமான அரசியலாக உங்களுக்குத் தெரிகின்றது?

முந்திய உங்களுடைய கேள்வியே அந்த அடிப்படையி்ல்தானே உள்ளது ! இலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியா எப்படிச் செயற்படும் என்றும் தமிழீழப் போராட்டத்துக்கு தமிழகத்தின் ஆதரவு எல்லை எவ்வளவாக இருக்கும் எனவும் தமிழகத்திலுள்ள பிரபலங்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் நன்றாகத் தெரியும். இதுவரையில் அவர்கள் காட்டிய ஆதரவும் அதற்காக நடத்திய போராட்டங்களும் என்ன வகையான நற்பயன்களை இலங்கைத் தமிழர்களுக்குத் தந்திருக்கிறது? கண்ணாமூச்சி காட்டியதைத் தவிர, எதுவுமேயில்லையே! பதிலாக, இந்தப் போராட்டங்களெல்லாம் சிங்களத் தரப்பைக் கலவரப்படுத்தி, தமிழர்களுக்கு எதிராகச் சிந்திக்கும் அச்சநிலையை, உளவியலை உண்டாக்கியதே மிச்சம்.
இதேவேளை தங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதை தமிழகத்துப் பிரபலங்கள் ஏற்றுக்கொள்ளத்தயாராகவும் இல்லை. இதை மறுபரிசீலனை செய்யவும் தயாரில்லை. குறைந்த பட்சம், சாத்தியப்படக்கூடிய விடயங்களான தமிழ் நாட்டில் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளின் விவகாரம், தமிழ்நாட்டு மீனவர்களின் அத்துமீறல்கள் போன்றவற்றிலாவது நியாயமான கரிசனையோடு நடந்து நல்ல தீர்வுகளைத் தரலாம். அப்படி எதுவுமே செய்ய மாட்டார்கள்.  
பதிலாக, “ஈழகாவியம்“ பாடி தங்கள் கல்லாப் பெட்டிகளை நிரப்பிக்கொள்ள முயற்சிக்கிறார்கள். இந்தக் கோமாளித்தனங்கள் நீடிப்பதற்குக் குடைவிரிக்கும் நம்மவர்களே வாய்ப்பளிக்கிறார்கள்.

உங்களைப் பொறுத்தவரையில் ஓர் கவிதை மொழியானது எப்படியாக இருக்க வேண்டும் ?

கவிதைக்குரியதாக இருக்க வேண்டும். அது கவிதையாக மாற வேணும்.

எல்லோருமே கவிதைதானே எழுதுகின்றார்கள்?

எல்லாக்கோழிகளும் போடுவது முட்டைதான். எல்லாப் பசுக்களும் தருவது பால்தான். என்பதால் எல்லாரும் எழுதுவதும் கவிதை என்றாகி விடுவதில்லை. இது கவிதைக்கு மட்டுமல்ல. பிற படைப்புகளுக்கும்தான்.

தமிழ் நவீனக் கவிதைக்கான பிரதிகளை புரிந்து கொள்ள முடியவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டை முன் வைப்பவர்கள் பற்றி உங்களுடைய புரிதல் எப்படியாக இருக்கிறது?

பயிலும் ஆர்வமில்லாத சோம்பேறிகள்.

வாசகனுக்கு புரியாத படைப்புகளை கொடுக்காத படைப்பாளியால் யாருக்கு என்ன லாபம் ?

எழுத்தாளரோ படைப்பாளியோ இலக்கியப் பண்டங்களை உற்பத்தியாக்கி விற்கும் கொம்பனிகளை வைத்துக் கொண்டிருக்கவில்லை. அதில் லாபத்தை நோக்கமாகக் கொண்டு அவர்கள் இயங்குவதுமில்லை. தங்கள் எழுத்தின் மூலம் பல்வேறு விதமான வாழ்க்கை முறைகளை வாசகர்களுக்கு அறிமுகமாக்குகிறார்கள். பல பண்பாடுகளை. பல மனநிலைகளை. பலவிதமான காட்சிகளையும் காலங்களையும் நிலப்பரப்புகளையும் இன்னும் தீராத காதலையும் துயரையும் சமூக ஊடாட்டங்களையும் சிக்கல்களையும் என எண்ணற்ற கோலங்களை. வெவ்வேறு உலகங்களை.

இது வாசர்களுக்காக அவர்கள் படைத்தளிக்கும் கொடை. இதைப் பயிலாதிருப்பது எவ்வளவு இழப்பு? ஓவியம், சிற்பம், இசை, நாடகம் என்று எத்தனை அருமையான படைப்புகள்....!

எதையும் புரிந்து கொள்ள வேண்டுமானால் முயற்சியும் பயிற்சியும் தேவை. எதுதான் முயற்சியின்றி விளைவாகும்? அறிதலும் புரிதலும் வாழ்வின் கலையே. மனித அடையாளமே அதுதான்.

‘எழுத்தாளரோ படைப்பாளியோ இலக்கியப் பண்டங்களை உற்பத்தியாக்கி விற்கும் கொம்பனிகளை வைத்துக் கொண்டிருக்கவில்லை. அதில் லாபத்தை நோக்கமாகக் கொண்டு அவர்கள் இயங்குவதுமில்லை“ என்று சொல்கின்றீர்கள். அப்படியானால் இலக்கியத் தரப்படுத்தல்கள் என்ன காரணத்துக்காக வந்து கொண்டிருக்கின்றன ? இதனால் படைப்பாளியானவன் உளச்சிக்கல்களை எதிர்கொள்கின்றான் அல்லவா ?

முதலில் “படைப்பாளியானவன்“ என்பதைத் திருத்திக் கொள்வோம். படைப்பாளி அல்லது படைப்பாளர் என வைத்துக் கொள்ளலாம். இருபாலாருக்குமுரியதாக. இலக்கியத்தில் லாபமா நட்டமா என்பதற்கு அப்பால் எதற்கும் தரமும் நல்லது என்ற அடிப்படையும் அவசியம். பொதுவாகவே, தரமில்லாத பொருட்களை யாரும் வாங்குதில்லை. அப்படி வாங்கினாலும் அவை நீடிப்பதுமில்லை. உரிய தேவையைப் புர்த்தி செய்வதமில்லை. மிகக் குறைந்த விலையுள்ள 10 ரூபாய்க்கு வாங்குகின்ற கீரையிலேயே நீங்கள் தரத்தைத்தான் பார்க்கிறீர்கள். அது முற்றியிருக்கிறதா. இலைகள் பழுத்திருக்கின்றனவா? வாடியிருக்கா செழிப்பாக இருக்கா? புச்சி புழு தின்றிருக்கா? இப்படிப் பலதையும் பார்த்தே அதை வாங்குவீர்கள். அப்படித்தான் எதற்கும் உரிய தரம் தேவை.

அது தங்கத்துக்கும் வைரத்துக்கும்தான் என்றில்லை.
படைப்பென்பது புதியது. புதுமையானது. புதிய வாழ்க்கையையும் புதிய உலகத்தையும் நமக்குள்ளே விரித்துக் காட்டுவது. இதைச் செய்யாதபோது விமர்சனம் வரும். விமர்சனம் என்பது இலக்கியத்தையும் படைப்பாளியையும் நெறிப்படுத்துவது. அது அறிவுச்செயற்பாடு. இதில் படைப்பாளிக்கு ஏன் உளச் சிக்கல்கள் ஏற்பட வேணும்? இதை ஏற்கும் பண்பும் பக்குவமும் அல்லவா வரவேண்டும்.

போரிலக்கியத்தில் கவிதைகளின் பங்கு எப்படியாக இருந்தது ?

சில கவிதைகள் போர்ப்பரணிகளாக இருந்தன. சில போருக்கு எதிராக இருந்தன. போருக்கு எதிராக இருந்த கவிதைகளை தமிழ்ச் சூழல் கொண்டாடியது குறைவு. கவனிக்க வேண்டிய ஒன்று, முஸ்லிம்களாலும் மலையகத்தில் வாழும் தமிழர்களாலும் எழுதப்பட்டவை போருக்கு மாற்றாகவே இருந்தன. 

இறுதிப் போர் முடிவடைந்ததின் பின்னர் வெளியாகிய புனைவுகளும் கதைசொல்லிகளும் ஏற்பபடுத்திய தாக்கத்தை அல்லது அதிர்வை, கவிஞர்களோ அல்லது அவர்களினூடாக வெளியாகிய கவிதைகளோ பெரிதாகப் பேசப்படவில்லையே ?

அப்படியல்ல. பா. அகிலனின் சமரகவிகள், நிலாந்தனின் யுகபுராணம், சேரனின் காடாற்று, றஸ்மியின் ஈ தனது பெயரை மறந்து போனது, திருமாவளவனின் கவிதைகள், பிரதீபாவின் நீத்தார் பாடல், சுகன் கவிதைகள், கற்சுறாவின் அல்லது யேசுவில் அறையப்பட்ட சிலுவை, என்னுடைய பலியாடு, ஒரு பயணியின் போர்க்காலக்குறிப்புகள், இரத்தமாகிய இரவும் பகலுடைய நாள், தீபச்செல்வனின் பதுங்கு குழியில் பிறந்த குழந்தை, ஆட்களில்லாத நகரத்தைத் தின்ற மிருகம், சித்தாந்தனின் துரத்தும் நிழல்களின் யுகம் எனப் பல கவிதை நூல்கள் வந்திருக்கின்றன.

"மரணத்துள் வாழ்வோம்" கவிஞர்களின் கவிதைத் தொகுப்பானது தமிழர் வாழ்வில் ஆயுதப் போர் முகிழ்ந்த காலத்தைப் பாடுபொருளாகக் கொண்டு கட்டமைத்து வாசகர் மத்தியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. ஆனால், இறுதிப் போரின் பின்னரான காலங்களின் சனங்களின் அவலங்களை,  போராளிகளின் மன உணர்வுகளை பாடுபொருளாக கொண்டு கவிஞர்களின் கவிதை தொகுப்பு இதுவரை வெளியாகாமல் இருப்பதற்கு என்ன காரணமாக இருக்கின்றது ?

நிச்சயமாக அப்படியான தொகுப்புகள் வந்திருக்க வேணும். அப்படி வந்திருந்தால் புதிய நிலைகளை அறிந்திருக்க முடியும். தவிர, இலக்கியம் என்பது வரலாற்று ஆவணமோ சமகால அரசியல் விளக்கமோ இல்லை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேணும். மரணத்துள் வாழ்வோம் காலகட்டத்தில் பெரும்பாலும் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் அரசினுடைய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான மனநிலையோடேயே இருந்தன. அதனால் ஒரு மையத்தை நோக்கிக் குவிந்த மனநிலை இருந்தது. இதை நீங்கள் மரணத்துள் வாழ்வோம் கவிதைகளில் காணமுடியும். இன்று அப்படியல்ல. இடைப்பட்ட காலத்தின் அரசியல் நிலவரங்களும் நம்பிக்கைச் சரிவுகளும் பல்வேறு மனநிலைகளையும் வேறுபாடான நம்பிக்கைகளையும் உருவாக்கியிருக்கின்றன. ஆகவே இப்பொழுது ஒரு கூட்டுத்தொகுப்பு வருமாக இருந்தால் அது பிரதானமாக மூன்று வகையான அல்லது மூன்றுக்கும் மேற்பட்ட வகையான நம்பிக்கைகளையும் மனநிலைகளையும் கொண்டிருக்கும். ஒன்று அரச பயங்கரவாதத்தையும் சிங்கள இனவாதத்தையும் எதிர்ப்பதாக. மற்றது நடந்த போராட்டத்தையும் போரையும் மறுபரிசீலனை செய்யும் மானுட விழுமியம் தழுவியதாக. மற்றது இரண்டுக்கும் இடைநிலை ஊடாட்டமுடையதாக. இதைவிட வேறு வகையிலும் அமையக் கூடும்.

“ஈழத்து இலக்கிய பரப்பில் இன்றுள்ள கவிஞர்கள் பலர் அடிமை வியாபாரிகளாகி விட்டனர்“ என்ற ஒர் குற்றச்சாட்டு அண்மையில் உலா வந்தது. இதுபற்றிய உங்கள் அவதானம் எப்படியாக இருக்கின்றது?

உள்நோக்கமுடைய - நோய்க்குற்றச்சாட்டுகளை பொருட்படுத்துவதில்லை. விமர்சனமாக இருந்தால் பார்க்கலாம், கவனிக்கலாம்.

குற்றச்சாட்டுகளோ இல்லை விமர்சனமோ பொதுவெளியில் ஒரு குழுமத்தை நோக்கி விரல்கள் நீளும் பொழுது அதற்குரிய எதிர்வினைகளை தரவேண்டியது ஒருவரது கடமையல்லவா ?

பொருட்படுத்தத்தக்கவைக்குத்தான் பதிலோ எதிர்வினையோ அளிக்க முடியும். அதுதான் நியாயமும் கூட.

கடந்த சில வருடங்களாக ஈழத்து எழுத்துப் பரப்பில் வெளியான கதைகள் மற்றும் நாவல்களை பற்றி அவைகள் வெளியாக முன்னரே அளவுக்கு மீறிய எதிர்பார்புகளை வாசகர்களுக்கு பிரபலங்கள் எனப்படுவோர் பொதுவெளியில் வாசகர்களுக்குக் கொடுக்கின்றனர். ஆனால் படைப்புகள் வெளியாகிய பின்னர் வாசகன் அந்தப்படைப்பை வாசிக்கும் பொழுது ஏமாற்றத்துகுள்ளாகின்றான் .இத்தகைய போக்கானது எந்தவகையில் நியாயமாக உங்களுக்குத் தெரிகின்றது ?

எதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு இப்படிக் கேட்கிறீர்கள் என்று புரியவில்லை. இது வணிக யுகம். காட்சி ஊடகங்களின் காலம். புத்தக விற்பனையும் வாசிப்பும் ஒறுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் வாசிப்பை ஊக்கப்படுத்துவதற்குரிய வாசகத் தூண்டலுக்கான முயற்சிகள் தவிர்க்க முடியாதவை. இதில் வணிக உத்திகள் பயன்படுத்தப்படுவது காலத்தின் விளைவு. ஆனால், நீங்கள் சொல்வதைப்போல முன்னபிப்பிராயங்கள் வாசகரையும் வாசிப்பையும் திசைதிருப்பி விடக்கூடிய அபாயமும் உண்டு. தேர்ந்த வாசகருக்கு இதெல்லாம் ஒரு பொருட்டேயல்ல.

இலக்கியப் பரப்பில் சர்ச்சைகளை உருவாக்கி அதன்மூலம் தமது இருப்பை தக்கவைத்துக்கொள்ளும் படைப்பாளிகள் பற்றிய உங்கள் அவதானம் எப்படியாக இருக்கின்றது ?

படைப்பையே நான் பார்க்கிறேன். அதற்கப்பால் எதுவும் இல்லை. அப்படி இருந்தாலும் அதற்குச் சமகால அடையாளம் மட்டும்தான்.

இலங்கை மூன்று அந்நிய நாடுகளால் ஆளப்பட்டது வரலாறு. ஆனால் உங்கள் வேட்டைத்தோப்பு, மற்றும் செங்கை ஆழியானின் கடல் கோட்டை தவிர்ந்து போர்த்துக்கேய, டச்சு, ஆங்கிலேய காலத்து புனைவுகள் அதிகஅளவு வெளியாகாமல் இருப்பதற்கு காரணம்தான் என்ன ?இதனால் இளைய தலைமுறையினராகிய எமக்கு அவர்களது பண்பாட்டு விழுமியங்கள் எதுவுமே தெரியாமல் போனது கொடுமையில்லையா ?

வேறு சிலரும் வரலாற்றை மையமாக வைத்துத் தங்கள் புனைவை எழுதியிருக்கிறார்கள். முக்கியமாக முல்லைமணி, க. கணபதிப்பிள்ளை, முல்லைக்கோணேஸ் இப்படிச் சிலர் இன்னும் உண்டு. நீங்கள் குறிப்பிடுவதைப்போல வரலாற்றை மையப்படுத்தி எழுதப்படும் புனைவுகள் நம்மிடையே குறைவுதான். அதற்கான காலம் இனி வரலாம். எதுவும் முடிந்து விட்டது என்றில்லை. இனித்தான் எல்லாமே என்று நம்புங்கள்.

பேராசிரியர் கைலாசபதி மற்றும் சிவத்தம்பி ஆகியோரது காலத்தில் ஏற்பட்டிருந்த பன்முகப்பட்டிருந்த விமர்சன வெளி சமகாலத்தில் எப்படியாக இருக்கின்றது ?

இப்பொழுது விமர்சனமே இல்லாது போய் விட்டது.அதேவேளை கைலாசபதி கா சிவத்தம்பி போன்றோருடைய விமர்சனம் பன்முகத்தன்மையுடன் இருந்தது என்றும் சொல்ல முடியாது .அவர்கள் முக்கிய விமர்சகர்களாக இருந்தார்கள் .அவர்களுடைய அரசியல் நிலைப்பாட்டின்படி தங்களுடைய கண்ணோட்டங்களையும் விமர்சனங்களையும் முன் வைத்தார்கள்.

இன்றைய தமிழ் நவீன இலக்கியம் பற்றி உங்களுடைய பார்வைதான் என்ன?

மகிழ்ச்சியைத் தருகிறது.

எப்படியான மகிழ்ச்சியை அது உங்களுக்குக் கொடுக்கின்றது ?

எல்லாத்தரப்பிலிருந்தும் எழுச்சிகளும் உரையாடல்களும் வெளிப்பாடுகளும் நிகழ்ந்து கொண்டிருப்பதால். பன்முக வெளிப்பாட்டின் களமாக இருப்பதால்.

புனைவை விட அனுபவத்தை எழுத்தில் கொண்டுவருது எந்தவிதத்தில் கடினமானது ?

அனுபவம் சாட்சி ரீதியானது .உண்மையை அடிப்படையாகக் கொண்டது .இதை நேர்மையாகச் செய்தால் கடினமே இல்லை.

சமகால இலக்கியப்பரப்பில் அரசியல் காரணங்களுக்காக படைப்பாளிகளை முடக்குவது அதிகரித்துக் காணப்படுவது எந்தவகையில் அறமாகும் ?

அறமேயில்லை.

இலக்கியச்சண்டைகள் பற்றிய உங்கள் புரிதல்கள் எப்படியாக இருக்கின்றது ?
காற்றிலே வீசப்படும் வாள்.

இலக்கிய அரசியலுக்கும் அரசியல் இலக்கியத்துக்கும் அடிப்படையில் எத்தகைய வேறுபாடுகளை உணருகின்றீர்கள் ?

முன்னது உள்நோக்கங்களின் அடிப்படையில் இயங்குவது. பின்னது, முன்னிறுத்தும் அரசியலை இலக்கிய வழிப்படுத்துவது. முன்னது உட்சுருங்கியது. பின்னது வெளி விரிந்தது.

பொதுவெளி என்பது துடக்குப் பார்ப்போருக்கான இடமல்ல என்று அண்மையில் குறிப்பிட்டிருந்தீர்கள்.ஆனால் சமகாலத்தில் பொதுவெளியானது துடக்குப் பார்ப்போரின் கூடாரமாகத்தானே இருக்கின்றது ?

நமது பொது வெளியென்பது அப்படி இருப்பதனால்தான் அப்படிச்சொன்னேன். அது என்னுடைய வலுவான விமர்சனம். இப்படித் துடக்குப்பார்க்கும் நிலை என்பது ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரானது. குறுகிய மனப்பாங்கின் விளைவு. அடிப்படையில் தயக்கங்களாலும் தாழ்வுச் சிக்கலினாலும் கட்டமைக்கப்பட்டது. ஆனால், தமிழ்ச் சூழலின் நிலை இதுவே. இப்படி இருந்து கொண்டு இவர்கள் எப்படி ஜனநாயக மறுமலர்ச்சியை எதிர்பார்க்க முடியும்? கறுப்பு - வெள்ளை மனோபாவத்தின் வெளிப்பாட்டோடு வாழ்ந்து கொண்டு பன்மைத்துவத்தை எட்ட முடியாது. முன்னோக்கிச் செல்லவும் சிந்திக்கவும் இயலாது. அப்படி நம்பிக்கொண்டிருப்பதும் கனவிற் திளைப்பதும் அபத்தமே. இது விருப்பத்துக்கும் நடைமுறைக்கும் இடையிலான முரண்பாடு.
ஆனால், உங்கள் கேள்வி வேறு திசையை நோக்கியதாகவே உணர்கிறேன்.

இலக்கியத்தின் ஊடாக சமூக உறவு என்பது எத்தகைய நிலையில் உள்ளதாகக் கருதுகின்றீர்கள் ?

தமிழர்கள் நீண்ட காலம் இலக்கியத்தோடு இணைந்திருந்தனர். தமிழ் வாழ்க்கை இலக்கிய மயப்பட்டது. இன்று அதிலிருந்து வெகுதூரம் விலகி விட்டனர். பல்வேறு கட்டமைப்புகளைக் கொண்ட சமூகமாக இருந்தாலும் ஒவ்வொரு சமூகத்துக்கும் தனித்தனியான அடிப்படைகளும் அடையாளங்களும் இருந்தன. இன்று இந்த அடிப்படைகள் குலைந்திருக்கின்றன. அதேவேளை அடையாளத்தை முன்னிறுத்தும் முனைப்பும் உள்ளது. அது அடிநிலைச் சமூகங்களிடத்தில்தான் அதிகம். அவர்களே பண்பாட்டைக்குறித்து அதிகமதிகம் சிந்திக்கிறார்கள். அல்லது, அவர்களால் அதை இலகுவாகக் கை விட முடியவில்லை.

இலக்கியம் சமூக உறவாகுவதற்கு நமது கல்வியும் நிர்வாக அமைப்பும் பொருத்தமாக இல்லை. ஆகவே, இலக்கியத்துடனான சமூக உறவென்பது, பெருங்குறைபாடாகவே உள்ளது. சுயாதீனமான இலக்கியச் செயற்பாடுகளின் வழியாக நடைபெறும் அளவுக்கே சமூக உறவும் ஊடாட்டமும் உள்ளது. இது மிகச் சிறிய அளவிலானது.

தமிழ் நாட்டில் உள்ள பதிப்பகங்களுக்கு ஈடாக ஈழத்திலே பதிப்பகங்கள் தோன்றமுடியாத சூழலுக்கு அடிப்படியிலான தடங்கல்கள் தான் என்ன ?

முன்னர் போர். ஆனாலும் அதற்குள்ளும் பல புத்தகங்கள், பிற வெளியீடுகள் வந்தன. புலிகளிடத்திலும் புலிகளுக்கு வெளியிலும் பதிப்பு முயற்சிகள் ஓரளவுக்கிருந்தன.
இப்பொழுது அதைவிடப் பொருத்தமானதொரு சூழல் உருவாகியிருக்கு. திட்டமிட்டு, ஒத்துழைத்துச் செயற்பட்டால் நிறையச் சாதிக்கலாம்.

எப்படியான திட்டமிடல் ஒத்துழைப்புகளை எதிர்பார்க்கின்றீர்கள் ?

சீரான தொடர்பாடல், முறையான ஒழுங்கமைப்பு, சிறந்த பதிப்பாக்கம், முறைப்படுத்தப்பட்ட விநியோகம், பரந்த அறிமுகம், கூரான விமர்சனம் என்ற தொடர் நிகழ்ச்சிகளும் புத்தகக் காட்சி, வாசகர் பெருக்கத்தை ஊக்கல் எனவும் பல தளங்களில் விரியும் இது. இதற்கு உலகெங்கும் உள்ள தமிழ் வாசகர்களும் புலம்பெயர் படைப்பாளிகளும் ஒத்துழைக்கலாம். ஒத்துழைப்பர் என்ற நம்பிக்கையும் உண்டு.

நான் தாயகத்தில் நின்றபொழுது ஒப்பீட்டளவில் வடமாகாணத்தை விட கிழக்கு மாகாணம் இலக்கியத்தளத்தில் வாசிப்பு அனுபவங்களில் மேலோங்கி இருந்ததை அவதானிக்க முடிந்தது .இதற்கு ஏதுவான காரணிகள்தான் என்ன ?

உண்மை. இதைப்பற்றி 1996, 97 இல் எழுதியிருந்தேன். வடக்கில் நீண்டகாலமாக இராணுவரீதியான நெருக்குவாரங்கள் இருந்தன. எழுத்துவதற்கும் பேசுவதற்கும் அச்சமும் அதன்வழியான தயக்கங்களும் நிலவியது. கிழக்கில் அந்தத் தன்மை சற்று வேறானது. அங்கே எழுவான்கரையில் தொடர்ச்சியான இலக்கியச் செயற்பாடுகள் இருந்தன. மட்டக்களப்பிலிருந்து அக்கரைப்பற்றுவரை ஒரு தீவிர இலக்கியச் செயற்பாட்டின் ஊற்று வற்றாதிருந்தது. தவிரவும், அங்கே முஸ்லிம் சமூகத்தின் இயங்குநிலை முக்கியமான ஒன்று. திருகோணமலையிலும் வ.அ.இராசரத்தினம் தொடக்கம் வடக்குக் கிழக்கு மாகாணசபை இணைந்திருந்த காலத்தை ஒட்டி கவிஞர் சு.வி, நந்தினி சேவியர் உட்பட்டவர்கள் வரையில் பலர் இயங்கிக் கொண்டிருந்தனர்.

மறுவளமாக வடக்கில் இலக்கியச் செயற்பாடுகளை விட பத்திரிகைகள் தாராளமாக வந்தன. பலதையும் எழுதின. கிழக்கில் ஒரு பத்திரிகை கூட இல்லை. இடையிடை தலைகாட்டியவையும் காட்டிய வேகத்தில் மறைந்து விடும். இருந்தும் கிழக்கில்தான் இலக்கிய முயற்சிகள் ஊட்டமாக இருந்தன. இதில் ஒரு முரணும் சில கேள்விகளும் மறைந்திருக்கின்றன. தீவிர நிலையில் இலக்கியத்தில் செயற்பட்டு வந்த ஒரு பிராந்தியத்தில் வெகுஜனப்பத்திரிகைக்கான களம் இல்லாமற் போனது எப்படி? 

வெகுஜனப்பத்திரிகைகள் அதிகமாக வந்து கொண்டிருந்த ஒரு பிராந்தியத்தில் இலக்கியச் செயற்பாடுகள் ஏன் வற்றியிருந்தன?
இப்பொழுது வடக்கில் எழுச்சியாக எழுத்தும் வாசிப்பும் உரையாடல்களும் நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. இளையவர்கள் பலர் உற்சாகமாக ஈடுபட்டிருக்கிறார்கள்.

‘அங்கே முஸ்லிம் சமூகத்தின் இயங்குநிலை முக்கியமானது என்று சொல்கிறீர்கள்’ எந்த அளவுக்கு முஸ்லீம் சமூகத்தின் இயங்குநிலை முக்கியமாக இருக்கின்றது ?

முஸ்லிம் சமூகத்தின் அரசியலும் அணுகுமுறையும் வாழ்க்கை அமைப்பும் தமிழ்த்தேசிய விடுதலைப்போராட்டத்தின் விளைவாக மாறுதலுக்குள்ளாகியது.
முஸ்லிம்கள் இன்னொரு நிலையில் தொடர்ச்சியாக எல்லாப்பிராந்தியத்திலும் தங்களை எழுதி வந்தனர், இன்னும் அப்படியே எழுதியும் இயங்கியும் வருகிறார்கள். அவர்களுக்குத் தமிழ்த்தேசியவாதம் உருவாக்கியதைப்போல கறுப்பு – வெள்ளை மனோநிலையும் தியாகி – துரோகி என்ற எதிர்நிலைப்பிரிகோடுகளும் இல்லை. இது அவர்களுடைய சுயாதீனத்தையும் இயல்பையும் பாதிக்கவில்லை. இதனால் தடுமாற்றங்களும் தயக்கங்களும் ஏற்படவில்லை. தடைகளும் தயக்கங்களும் இல்லாதிருந்தபடியால் நல் விளைச்சல்கள் கிடைத்தன. இப்பொழுது அப்படியான ஒரு நோய்க்குறி முஸ்லிம்களிடத்திலும் உருவாகி வருகிறது. இதை உருவாக்குவது அரசியலே.

எப்படி இடையிடை தலைகாட்டுவதும் காட்டிய வேகத்தில் மறைந்து விடும் என்று சொல்கின்றீர்கள் ?

கிழக்கில் ஒரு பத்திரிகையை நடத்த வேண்டும் என எவரும் நினைத்தாக இல்லை. அதற்கான சில முயற்சிகள் அவ்வப்பொழுது நடந்துள்ளன. மறைந்த மனோராஜசிங்கம், சாந்தி இருவரும் முயற்சித்து “தினக்கதிர்“ என்ற பத்திரிகையை வெளியிட்டனர். ஆனால், அதுவும் தமிழ்த்தரப்பினால், முடக்கப்பட்டது. இதைப்போல வேறு சில முயற்சிகள் நடந்தன. அவற்றின் ஆயுளும் நீடிக்கவில்லை.

வன்னி மண்ணிலேயே உங்கள் வாழ்க்கை பலவருடங்களாக ஓடிக்கொண்டிருக்கின்றது. முள்ளிவாய்க்கால் பேரவலம் முடிவடைந்து ஏழு வருடங்களைக் கடந்து விட்ட நிலையில் வன்னிச் சனங்களது இருப்பு தற்பொழுது எப்படியாக இருக்கின்றது?

முடிவற்ற துயரத்தில் சிக்கியுள்ளது. பிள்ளைகள் படிக்கச் செல்லாமல் பாடசாலைகளில் இருந்து இடைவிலகுகிறார்கள். தொழில் இல்லை. பேயாட்டம்போடுகிறது வறுமை. பெண்கள் தங்களுடைய உடலை விற்பதைத் தவிர, வேறு கதியில்லை என்ற அளவில் பல கிராமங்கள் உள்ளன. ஆதரவற்ற சிறுவர் இல்லங்கள் பெருத்துக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு மாதமும் இந்த இல்லங்களில் சேரும் பிள்ளைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டு போகிறது. போருக்குப் பிறகு இந்த எண்ணிக்கை குறைந்திருக்க வேணும். ஆனால், போர்க்காலத்தை விட இப்பொழுதே எண்ணிக்கை கூடிச் செல்கிறது. புலம்பெயர்ந்த மக்கள் இந்தச் சிறார் இல்லங்களுக்குப் பணத்தை அள்ளிக் கொடுக்கிறார்கள். இது தீர்வல்ல. இது சரியுமல்ல. அப்படியென்றால், ஆதரவற்ற சிறார்களின் பெருக்கத்தை நாம் விரும்புகிறோமா ? இதற்குப் பதிலாக சனங்கள் தொழில் செய்து வாழக்கூடிய வாய்ப்புகளை உருவாக்கினால், அதன் மூலம் உழைப்பும் வருவாயும் கிடைக்கும். சமூகம் சீராகச் சிறப்பாக இயங்கும். இதுதான் தேவையானது. ஆனால், அப்படி நடக்கவில்லை.

படையினர் தொடர்ந்தும் இருப்பதற்கான தேவை அல்லது காரணம் என்னவாக இருக்கின்றது ?

படையினரின் உளவியலே வேறு. அது அரசியலுக்கு அப்பாலானது. இலங்கையில் அரசியற் தரப்பையும் விட அதிக பலமுடையது படையும் புலனாய்வுமே. அது தனக்கு எது சரி, எது தேவை என்று படுகிறதோ அதையே செய்யும். அதை மிஞ்சக்கூடிய அரசியல் ஆளுமை இலங்கையில் இதுவரையில் இல்லை. அப்படியான ஒரு ஆளுமை வந்தால்தான் மாற்றங்களைப் பற்றிச் சிந்திக்க முடியும்.

படையினரைப் பொறுத்தவரை இப்பொழுது அவர்கள் எட்டியிருக்கும் நிலை மிகப் பாதுகாப்பானது. இப்பொழுது தமிழ்ப்பிரதேசங்களில் மிகச் சாதாரணமாகவே படை அதிகாரிகள், அதிலும் உயர்நிலை அதிகாரிகள் திரிகிறார்கள். 

மாலைவேளைகளில் உடற்பயிற்சிக்காக தனியாகவே நடக்கிறார்கள். முன்னர் அப்படியல்ல. மிகப்பெரிய பாதுகாப்பு ஏற்பாடுகள், கவசங்கள் எல்லாம் இருந்துமே பாதுகாப்பற்ற நிலையில் மரணத்தைத் தழுவிக்கிடந்தவர்களுக்கு இன்றைய இந்தச் சுதந்திர நிலை மிகப் பெரிய வாய்ப்பு. அதை அவர்கள் இழக்க விரும்பமாட்டார்கள். ஆகவேதான் அவர்கள் தமது பாதுகாப்பு ஏற்பாடுகளை, படை முகாம்களை, கண்காணிப்பை, விவரம் திரட்டுவதை எல்லாம் தொடர்ந்தும் செய்கிறார்கள். மீண்டும் அவர்கள் மரணத்தைத் தழுவிக்கிடக்கவும் மரணத்தில் மண்டியிடவும் விரும்பவில்லை. இது அவர்கள் தொடர்ந்தும் தமது நிலைகளில் இருப்பதற்கும் பிடியை இறுக்கிப்பிடிப்பதற்குமான காரணங்கள்.
போர் முடிந்த பிறகும் படையினர் தொடர்ந்தும் இருப்பதற்கான தேவையை அரசும் தீவிர தமிழ்த்தேசியவாதிகளுமே உருவாக்குகின்றனர். அரசாங்கம் தன்னுடைய பிடியை – ஆதிக்கத்தை – எச்சரிக்கையை தொடர்வதற்குப் படையை நிலைகொள்ள வைக்கிறது.

தீவிர தமிழ்த்தேசியர்கள், இந்தியாவையும் பிற மேற்குலக நாடுகளையும் துணைக்கிழுக்கும்போது இலங்கை அரசுக்கும் சிங்களவர்களுக்கும் எதிராகப் பிரகடனங்கள் செய்யும்போது அவர்களுக்கு அச்ச உணர்வே மேலிடுகிறது. “மீண்டும் நெருக்கடிகள் தங்களுக்கு உண்டானால்… ?“ என்ற அச்சம் அவர்களை எச்சரிக்கை அடைய வைக்கிறது. போதாக்குறைக்கு தமிழ்நாட்டில் ஈழ ஆதரவாளர்கள் என்று சொல்லப்படுவோரின் வீரப் பிரகடனங்கள். இவையெல்லாம் சிங்களத்தரப்பைக் கலவரமூட்டும் சங்கதிகள். ஏற்கனவே சிங்கள வரலாறு தமிழ்நாட்டினுடைய ஆதிக்கத்தினால் உண்டான அச்சுறுத்தலை தன்னுடைய உளவியலில் கொண்டிருக்கிறது. இதெல்லாம் சேர்ந்தே படைகளை விலக்காமல் தொடர்ந்தும் நிலைகொள்ள வைக்கின்றன. ஆனாலும் எல்லாவற்றையும் மீறி, மாற்றங்கள் நிகழ்ந்தே தீரும். அதற்கான காலம் கனிய வேணும்.

கிராமிய வாழ்க்கை முறையையும் இறுகிய குடும்ப பின்னணிகளையும் கொண்ட ஈழச்சமூகமானது இன்று இயந்திர வாழ்வில் தன்னை தொலைக்கின்றது என்பதனை என்னால் அவதானிக்க முடிந்தது .இதற்கு ஏதுவானகாரணிகள் எதுவாக இருக்க முடியும் ?

அப்படியா ? எதனாலும் கரையாத பழைய கல்லாகத்தானே ஈழத்தமிழ்ச்சமூகம் மாற்றங்களுக்குட்படாமல் இருக்கிறது என்பதே என்னுடைய அவதானம். தவிர, இயந்திரகதியான வாழ்க்கை என்பது உலகளாவிய விளைவு.

தமிழர் தாயகப் பிரதேசங்களான வடக்கு கிழக்கில் சாதியமானது மாறிவரும் உலகமாயதலில் நீர்த்துப் போய் உள்ளதாக எண்ணுகின்றீர்களா ?

அப்படிச் சுகமான எந்தக் கற்பனைகளுக்கும் இடமில்லை. தவிர, இந்தக் கேள்வி சாதிமான்களைக் கேட்கவேண்டியது. அவர்கள்தான் இதற்கான பதிலைச் சொல்ல வேண்டியவர்கள். அவர்களால்தான் சாதி பராமரிக்கப்படுகிறது.

உங்கள் பார்வையிலே சாதிமான்கள் என்பவர்கள் யாராக இருக்கின்றார்கள் ?

சாதியை இன்னும் அழியவிடாமல், அதை நுட்பமாகப் பராமரித்துக் கொண்டிருப்போர். அதைப் பராமரித்துக் கொண்டே சாதி இல்லை என்றும் அதைத் தாங்கள் பார்ப்பதில்லை என்றும் அழிச்சாட்டியம் செய்து கொண்டிருப்போர்.

என்னுடைய பார்வையில் என்றில்லை. சாதிய வேறுபாடுகளினால் தினமும் அவமானங்களையும் நெருக்கடிகளையும் சந்தித்துக் கொண்டிருக்கும் அனைவரும் இப்படித்தான் சொல்வார்கள். இது யதார்த்தம். கொடிய அனுபவம்.

ஈழத்திலே நீர்த்துப் போயுள்ள சாதீயத்தை புலம் பெயர்ந்தவர்களே ஊதிப்பெருப்பிக்கின்றார்கள் என்ற விமர்சனம் பொதுவெளியில் உண்டு உங்களது அவதானிப்பில் இது எப்படியாக இருக்கின்றது ?

ஒரு வகையில் தவறு. இன்னொரு வகையில் சரி. இல்லாத ஒன்றை எவர், எங்கிருந்து, எப்படித்தான் ஊதிப்பெருப்பித்தாலும் அது பெருக்காது. தங்காது. இருக்கின்ற ஒன்றை எப்படி மறைத்தாலும் அது கூடியகெதியில வெளியே தலையைக் காட்டி விடும்.
தவிர, இதைப்பற்றி எத்தனையோ பேர் பேசி விட்டார்கள். இன்னும் இந்தக் கேள்வியா ?

சரி, பதில் சொல்லித்தான் ஆகவேணும் என்றால், எந்த ஊரில் சாதி இல்லை என்று சொல்லுங்கள் ? சாதியத்தைக் கடந்தவர்களாக வாழ்க்கை முறையில் எத்தனை வீதமானவர்கள் இருக்கிறார்கள் ? அத்தகைய பண்பாட்டுப்புரட்சி இந்த மண்ணிலே நடந்திருந்தால், அவற்றை ஆதாரமாக முன்வையுங்கள்.

இன்னும் ஊர்களில் சாதி அடையாளங்களும் பிரிவினைகளும் ஏற்ற இறக்கங்களும் அப்படியேதான் உள்ளன. அரசாங்கப்பாடசாலைகளிலேயே சாதி ஒடுக்குமுறையும் ஓரங்கட்டல்களும் நடக்கின்றன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நிகழும் சாதிய நுண்ணரசியல் பகிரங்கமானது. மறுக்கவே முடியாத ஒன்று. அதிகம் ஏன், சாதியத்தைக் கடப்பதற்கான ஒரு வழி என நம்பப்பட்ட கிறிஸ்தவ மதத்தில் கூட சாதிய அதிகாரமே உள்ளது. இதுவரையில் வடக்கிலே ஒடுக்கப்பட்ட சமூகப்பின்புலத்திலிருந்து ஒரு ஆயர் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை. ஆனால், அதிகமான கிறிஸ்தவ மதகுருக்கள் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.

ஊரை விட்டுப்போனவர்கள், புலம்பெயர்ந்து பன்மைத்துவப் பண்பாட்டு நாடுகளில் சாதிய ரீதியில் வாழ்வது, அந்த அடிப்படையிலேயே, தங்கள் பிள்ளைகளுக்கான மணமகன் - மணமகள் தேர்வுகளைச் செய்வதிலிருந்து பல வகையில் இது செழிப்பாக உள்ளது.

ஆகவே ஊரிலே சாதி மறையக் கூடிய நிலையிருந்தாலும் நீங்கள் சொல்வதைப்போல இந்த இரண்டாம் நிலையினர் – இந்த வகையினர் அதை அனுமதிக்கமாட்டார்கள்.

மலையகத்தமிழர்கள் எந்தவிதத்தில் யாழ்ப்பாணத்தமிழர்களால் பயன் பெற்றிருக்கின்றார்கள் ?

கல்வி, மருத்துவம் ஆகியவற்றை மலையகத்தில் யாழ்ப்பாணத்தவர்களே கடந்த நூற்றாண்டில் செய்தனர். இதில் கணிசமானளவு பங்களிப்புண்டு.

நீங்கள் யாழ்ப்பாணத் தமிழர்களை முற்றிலும் மலையகத் தமிழர்களுக்கு எதிராக எழுதியதாக ஓர் விமர்சனம் பொதுவெளியில் உண்டு .இதற்கு உங்கள் தரப்பு விளக்கம்தான் என்ன ?

இதற்கு “காலச்சுவடு“வில் நான் எழுதிய விமர்சனக்கட்டுரையை மீளவும் தீர வாசிப்பது நல்லது. தவிர, அதற்கான விளக்கத்தை ஆதாரபுர்வமாக அதன் தொடர்ச்சியாக தொடர்ந்து வந்த இதழில் அளித்தும் விட்டேன். அது என்னுடைய கருத்து மட்டுமல்ல. மலையகத்தவர்கள் அத்தனைபேரின் கருத்தும் நிலைப்பாடும் அனுபவமும் அதுதான். அதற்காக முற்றுமுழுதாக யாழ்ப்பாணத்தவர்கள் முழுமையான அநீதியை இழைத்தனர் என எங்கும் நான் சொல்லவில்லை. ஆனால், இழைக்கப்பட்ட அநீதிக்குப்பொறுப்பாளிகள் அவர்கள் என்பதை எவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதை மீண்டும் அழுத்திச் சொல்கிறேன். நேர்மையாளர்கள் (இதயமுள்ளவர்கள்) இதை மறுக்க முடியாது.

மலையகத்து இலக்கியச் சூழல் சமகாலத்தில் எப்படியாக இருக்கிறது?

தவச்செல்வன், பாலமுருகன், மல்லியப்பு சந்தி திலகர், லெனின் மதிவானம், வே. தினகரன். எட்டியாந்தோட்ட கருணாகரன், லுணுகுலை சிறி என புதியவர்கள் அங்கிருந்து எழுதுகிறார்கள். ஆய்வு, விமர்சனம் என்ற துறைகளில் சரவணகுமார் போன்றவர்கள் உள்ளனர். புதிய முனைப்புகள் நிறைய உண்டு.

அண்மையில் பேராசிரியர் மு. நித்தியானந்தன் எழுதிய ‘கூலித்தமிழ்’ எத்தகைய தாக்கத்தை மலையகத்தில் ஏற்படுத்தியது?

மலையக வாழ்வையும் வரலாற்றையும் ஏற்கனவே பலர் எழுதியும் தொகுத்தும் பதிவு செய்தும் பங்களித்துள்ளனர். மு. நித்தியானந்தன் சமகாலச் சூழலில் அவற்றுக்கு ஒரு வெளிச்சத்தைப் பாய்ச்சி, மலையகத்தின் சமகால அரசியல், சமூகச் சிந்தனைக்கு வளமூட்டியிருக்கிறார். இது மலையகத்துக்கு மட்டுமல்ல, அதற்கப்பால் தமிழ்ச்சூழலுக்கும் இலங்கை வரலாற்றுக்கும் ஒரு முக்கியமான அடிப்படைப் பார்வையை உண்டாக்க உதவியிருக்கிறது.

ஈழத்தில் மலையகத் தமிழர்கள் நடத்தப்பட்ட விதத்தை ‘கூலித்தமிழ்’ விவரிக்கிறது. சமகாலத்தில் தமிழகத்தில் இலங்கையர்கள் நடாத்தப்படும் விதத்தை ஒப்பிடும்போது உளவியல்ரீதியான கணக்குத் தீர்த்தல் என்று எடுத்துக்கொள்ளலாமா?


அப்படியல்ல. மலையகத்தமிழர்களை ஈழத்தமிழர்கள் நடத்தியதற்கும் ஈழத்தமிழர்கள் தமிழகத்தில் நடத்தப்படுவதற்கும் இடையில் எந்த ஒற்றுமையும் பழி தீர்த்தலும் இல்லை என எண்ணுகிறேன். தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழர்கள் - அகதி முகாம்களில் உள்ளவர்கள் மிக எளியவர்கள். பின்தங்கிய நிலையுடையோர். இவர்களின் பிரதிநிதிகள் இலங்கையிலும் ஒடுக்கப்பட்ட நிலையிலேயே இருந்தனர். ஆகவே இவர்களைப் பழிக்குப் பழியாகக் கொள்வதில் அர்த்தமில்லை. அப்படியான சிந்தனையோடு தமிழகம் ஈழ அகதிகளை நடத்துவதாக நான் எண்ணவுமில்லை. மலையக மக்களின் மீது ஆதிக்கம் செலுத்தியவர்கள் யாழ்ப்பாணத்தின் மேட்டிமைகளே. அவர்கள் தமிழகத்தில் இருந்தாலும் மேட்டிமைகளாகத்தான் இருப்பர்.

ஈழத்தின் ஊடக சுதந்திரமானது தற்பொழுது காத்திரமாக உள்ளதா ?

இல்லை. அதேநிலையில்தான். ஊடக சுதந்திரத்தைப் பற்றிப் பேசும்போது ஊடகமுறையியலைப்பற்றியும் பேச வேண்டும். ஈழத்தில் ஊடக முறையியல் வளர்ச்சியடையவே இல்லை. அது தன்னைத்தானே துஸ்பிரயோகம் செய்கிறது. ஒற்றைப்படுத்தப்பட்ட பரப்புரையைத்தான் பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் செய்கின்றன. இதனால், ஊடக சுதந்திரத்தைப் பல சந்தர்ப்பங்களிலும் அவை பாதிப்படைய வைக்கின்றன. விதிவிலக்கானவையும் உண்டு. அவை சொற்பம்.

நீங்கள் ஊடகவியலாளராகவும் இருக்கின்றீர்கள். அண்மையில் ஊடகவியலாளர் துரைசிங்கம் பொதுவெளியில் தமிழகத்தை சேர்ந்த அ. ரவிக்குமாரை சாதியின் பெயரால் நிந்தனை செய்ததை தொடர்ந்து ஆதரவு எதிர்ப்பு என்று எழுந்த பலத்த சர்சைகளை சமூக வலைத்தளங்களில் அவதானிக்க முடிந்தது .இந்த சர்சைகள் பற்றிய உங்கள் கருத்துதான் என்ன ?

தமிழ்க்குணம். இழிவு.

ஆனால் துரைசிங்கம் தொடர்பான சர்சையில் அவர், “தான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை, கோபத்தில் பேசிவிட்டேன், வருந்துகின்றேன்“ என்று சொல்லிய பிறகும், ஐபீசி தொலைக்காட்சி மற்றும் வானொலிக்கான எதிர்ப்பாளர் அரசியல், தமிழ் தேசியக் கூடமைப்புக்கான எதிர்ப்பரசியல் மற்றும் துரைசிங்கத்தின் தனிப்பட்ட எதிர்ப்பாளர்கள் என்று மும்முனை தாக்குதல்கள் துரைசிங்கம் மீது நிகழ்த்தப்பட்டதே?

அப்படியென்றால் அவருக்கு ஒரு புச்செண்டைப் பரிசளித்து விடுங்கள்.

வடபுலத்தின் நன்நீர் நிலைகள் சுன்னாகத்தில் இருக்கும் மின்சார நிலையத்தால் மாசடைந்ததாக சொல்லப்படுவது பற்றி என்ன சொல்கின்றீர்கள் ?

இது ஒரு பகிரங்கமான குற்றச்சாட்டு. இந்தப் பேராபத்தைச் சமூக விஞ்ஞானிகளும் சமூகச் செயற்பாட்டாளர்களும் தெளிவாகச் சொல்லி வருகிறார்கள். இது தொடர்பான ஆய்வுகளும் நடந்திருக்கின்றன. கழிவு ஓயில் பிரச்சினை குடிநீரைப் பாதித்திருப்பது உண்மையே. ஆரம்பத்தில் இதை ஏற்றுக்கொண்ட வடக்கு மாகாணசபை இப்பொழுது மறுத்துரைக்கிறது. இந்தத் திடீர் மறுப்புப் பலரையும் சந்தேகம் கொள்ள வைத்துள்ளது. இதன் பின்னால் தாரளமான ஊழல்கள் சம்மந்தப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தண்ணீருக்கான போராட்டம் நடந்து கொண்டேயிருக்கிறது. கழிவு ஓயிலுக்கு அப்பால் நிலத்தடி நீர் மாசடைந்திருப்பது பெரிய பிரச்சினை. நிலத்தடி நீர்மாசடைந்திருக்கும் பிரச்சினை மிக ஆழமானது. அது யாழ்ப்பாணத்தை வேறு விதமாக்கக்கூடியது.

யாழ் பல்கலைக்கழகம் பற்றிய உங்கள் மதிப்பீடும், அண்மையில் அது கொண்டுவந்த ஆடைக்கட்டுப்பாடு பற்றிய சுற்று நிருபமும், அதன் தொடரான மீள்பெறுகையும் அதன் பின்னர் கலைப்பீட மாணவர்களினால் ஆடைகட்டுப்பாடு பற்றி விடப்பட்ட ஏற்றுக்கொள்ளல் அறிக்கை பற்றிய உங்கள் எண்ணப்பாடு எப்படியாக இருக்கின்றது ?

பாழடைந்த ஒன்று. புனரமைப்புச் செய்ய வேண்டியநிலையில் உள்ளது. ஆனால், கட்டிடங்களை அல்ல. ஆடைக்கட்டுப்பாட்டு விசயம் ஆச்சரியப்பட வேண்டிய விசயமல்ல. அவர்கள் அப்படித்தான் சிந்திப்பார்கள். பானையில் உள்ளதே அகப்பையியில் வரும்.

1970, 80களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மிக முக்கியமான அறிவியல் மையமாகவும் செயற்படுவோரின் களமாகவும் சிந்தனைக் கூடமாகவும் இருந்தது. இதனால் பல ஆளுமைகள் உருவாகினார்கள். பின்னாளில் அவர்கள் உலகம் முழுவதும் பரந்து இன்று சிறப்பான அடையாளங்களோடு உள்ளனர். இந்தக் காலப்பகுதியில் போராளிகளாகச் சென்ற பல்கலைக்கழக மாணவர்களும் உண்டு.

அப்பொழுது கிழக்கு மாகாணத்தில் வீசிய புயலினால் ஏற்பட்ட அழிவுகளுக்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் களப்பணி செய்தனர். தென்பகுதி வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்கள் அகதிகளாக வடக்கு நோக்கி வந்தபோது அதைப் பொறுப்பேற்றுப் பராமரித்தனர். தண்ணீர்த் தட்டுப்பாடுள்ள இடங்களில் கிணறுகளை அமைத்துக் கொடுத்தனர். தீண்டாமை நிலவிய கிராமங்களில் புறக்கணிக்கப்பட்ட மக்களு டைய நலன்களைப் பேணுவதில் உழைத்தனர். இப்படிச் சமூகமயமாகி நின்று சிந்தித்துச் செயற்பட்ட பல்கலைக் கழகம் இன்று சமூகத்தோடு தொடர்பே இல்லாமல் ஒடுங்கிவிட்டது. தாழ்வுச்சிக்கலால் அது தவிக்கிறது.

அப்படியென்றால்  யாழ்ப்பாணத்தில் புத்திஜீவிகள், சமூகச் சிந்தனையாளர்கள் இல்லவே இல்லை என்கிறீர்களா?

‘தாழ்ந்து பறக்கும் தமிழ்க்கொடி’ என்று சுந்தர ராமசாமி ஒரு தடவை குறிப்பிட்டார். அப்படியான நிலையில்தான் இன்றைய ஈழத் தமிழ்ச் சமூகம் உள்ளது. உலகம் முழுவதும் பரந்து வாழ்ந்தாலும் அது சிந்தனையில் சிறந்து வாழ்கிறதாகச் சொல்ல முடியாது. யாழ்ப்பாணத்தில் இது இன்னும் மோசமான நிலையில் உள்ளது. யாழ்ப்பாணத்தில் இப்பொழுது கோயில்களும் முதியோர் இல்லங்களுமே அதிகமாகி வருகின்றன. இருக்கிற கோயில்கள் பெருப்பித்துக் கட்டப்படுகின்றன. மதப்பற்றும் மத நம்பிக்கையும் வரவரக் கூடிச்செல்கிறது. ஒரு சமூகம் சீராகச் சிந்திக்கிறதாக இருந்தால் அந்தச் சமூகத்தின் ஊடகங்களிலும் கல்வி நிறுவனங்களிலும் அதற்குரிய சிறப்பான அடையாளங்களைக் காண முடியும்.

இன்றைய யாழ்ப்பாணத்தில் இந்தச் சிறப்புகள் இல்லை. பல்கலைக்கழகத்துக்கு உள்ளேயும் இல்லை; வெளியேயும் இல்லை. ஒப்பீட்டளவில் வெளிச்சூழல் சற்றுப் பரவாயில்லை எனலாம்.

கருணாகரனுக்கான இலக்கிய அரசியல்தான் என்ன ?

அப்படியொன்றில்லை. அரசியல் சார்ந்த இலக்கியம் உண்டு. அதைக் கடந்ததும் உண்டு. வரையறைகள் எதுவுமில்லை.

காலச்சுவடு -இந்தியா 


02 ஆடி 2016